வான்கடேவில் நடந்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல்லின் அசாத்தியமான இன்னிங்ஸால் ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது.

292 ரன்கள் என்ற இலக்கை வென்றதில் மேக்ஸ்வெல் மட்டும் 128 பந்துகளில் 201 ரன்களை மேக்ஸ்வெல் எடுத்திருந்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் மேக்ஸ்வெல் செய்த முக்கியமான சாதனைகள் இங்கே…
*ஆஸ்திரேலியா சார்பில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கும் முதல் வீரர் மேக்ஸ்வெல்தான். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக வாட்சன் 185* ரன்களை வங்கதேசத்திற்கு எதிராக அடித்திருந்தார். அதுதான் ஓடிஐ போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

*ஓடிஐ போட்டிகளில் இதற்கு முன் இரட்டை சதம் அடித்த வீரர்கள் எல்லாமே முதலில் பேட் செய்கையில்தான் அடித்திருக்கிறார்கள். மேக்ஸ்வெல்தான் சேஸிங்கில் இரட்டை சதம் அடிக்கும் முதல் வீரர்.
*ஓடிஐ போட்டிகளில் இதற்கு முன் இரட்டை சதம் அடித்திருக்கும் வீரர்கள் எல்லாருமே ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கியே அந்தச் சாதனையைச் செய்திருக்கின்றனர். ஆனால், மேக்ஸ்வெல் மட்டும்தான் நம்பர் 6 இல் இறங்கி இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

*மேக்ஸ்வெல்லின் இந்த இரட்டை சதம் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது இரட்டை சதமாகும். முதல் இடத்தில் இருக்கும் இஷன் கிஷன் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார். மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

*ஓடிஐ போட்டிகளில் 7 வது விக்கெட்டிற்கு அதிக ரன்களை குவித்த பார்டனர்ஷிப் என்கிற சாதனையை மேக்ஸ்வெல் – கம்மின்ஸ் கூட்டணி செய்திருக்கிறது. இருவரும் இணைந்து 201 ரன்களை அடித்திருந்தனர். இதற்கு முன் பட்லரும் அடில் ரஷீத்தும் 7 வது விக்கெட்டிற்கு 127 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.
ஆஸ்திரேலியா அடித்த மொத்த ரன்களில் 82% ரன்களை மேக்ஸ்வெல் மட்டுமே எடுத்திருந்தார். அவரின் அசாத்திய ஆட்டத்தால் மட்டுமே ஆஸ்திரேலியா வென்றது.
அவரின் அதிரடியை பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.