காசா:ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் வடக்கு பகுதி முழுதும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த மாதம், 7ம் தேதி மோதல் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையேயான போர், ஒரு மாதத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதலில் ஈடுபட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, காசாவின் வடக்கே உள்ள மக்களை, தெற்கு பகுதிக்கு செல்லும்படி எச்சரித்தது. இதையடுத்து, வடக்கு பகுதியில் இருந்த, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தெற்கு பகுதியில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
வடக்கு பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், தொடர்ந்து வான்வழி தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் பதுங்கு குகைகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும், 450க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வடக்கு பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. வடக்கு பகுதிக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த தாக்குதல்களில், இஸ்ரேல் தரப்பில், 1,400 பேரும், காசா பகுதியில், 9,700 பாலஸ்தீன அகதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டால், பலி எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும் என, அஞ்சப்படுகிறது.
எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அரபு நாடுகள் எச்சரிக்கை விடுத்தும், தன் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடர்கிறது. இந்நிலையில், அமைதி ஏற்படுத்தும் வகையில், பேச்சு நடத்த வந்த, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென், நேற்று நாடு திரும்பினார். அமைதி பேச்சுகள் தொடரும் என, அவர் கூறியுள்ளார். ஆனால், இதுவரை நடந்த பேச்சில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
இதற்கிடையே, மற்றொரு அண்டை நாடான லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
மற்றொரு அண்டை நாடான எகிப்தை ஒட்டியுள்ள காசாவின் ரபா எல்லைச் சாவடி வாயிலாக, பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதுவரை, 450 டிரக்குகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், காசாவில் உள்ள, 23 லட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு இதுபோதுமானதல்ல என, நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறியுள்ளனர்.
காசாவின் டெய்ர் அல்பலாஹ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 66 பாலஸ்தீன அகதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய இறுதிச் சடங்கு நேற்று முன் தினம் நடந்தது.
இதற்கிடையே மற்றொரு மேற்காசிய நாடான துருக்கியில், பாலஸ்தீன ஆதரவாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், அங்குள்ள விமானப் படை வளாகத்துக்குள் நுழைய முயன்றனர்.
இங்கு, அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. இதையடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், துருக்கி போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்