எ.வ.வேலு: “அந்த 2 கம்பெனிகளுக்கும், எனக்கும் என் துறைக்கும் சம்பந்தம் இல்லை!” | முழு விவரம்

மிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில், கடந்த 5 நாள்களாக வருமானவரித் துறையினர் சல்லடைப் போட்டு சோதனை நடத்தினர். சென்னை, திருவண்ணாமலை, கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வரையிலும் படர்ந்த இந்தச் சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்து, ஐ.டி சோதனை குறித்து தன்னிலை விளக்கமளித்தார்.

‘‘என்னுடைய கோப்புகளை பார்க்கும் உதவியாளர் சுப்பிரமணி மற்றும் எனது ஓட்டுநரிடம் கடந்த 5 நாள்களாக கேள்வி என்ற பெயரில், வருமானவரித் துறையினர் மன உளைச்சலை உருவாக்கிவிட்டனர். கண்ணீர் வரவழைக்கும் வகையில், கேள்விகளால் துளைத்துவிட்டார்கள்.

அமைச்சர் எ.வ.வேலு

நான் தனியாக வசித்துவருகிறேன். எனது மனைவி தனியாக வசிக்கிறார். எனது 2 மகன்களும் தனித்தனியாக வசிக்கிறார்கள். அனைவருமே வருமானவரியை சரியாக கட்டி வருகிறோம். ஆனால், அனைவரிடமுமே வருமானவரித் துறையினர் கேள்விகளால் துளைத்தெடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கின்றனர். இறுதியாக நான் தங்கியிருந்த கல்லூரிக்கே வந்து, சல்லடைப் போட்டு ஆய்வு நடத்தினர். என்னை தொடர்புப்படுத்தி விழுப்புரம், கோயம்புத்தூர், வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். எல்லோருமே பயந்துபோயிருக்கின்றனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள்மீது எனக்கு கோபம் இல்லை. அவர்கள் அம்புதான். எய்தவர்கள் எங்கேயோ இருக்கின்றனர். இந்த சோதனை தொடர்பாக வெளியாகியுள்ள கற்பனை கதைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். நான் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன். நான் அடிப்படையில், விவசாயி வீட்டுப் பிள்ளை. இது, அனைவருக்குமே தெரியும்.

திருவூடல் தெருவில் ‘ஜீவா அச்சகம்’ என்ற பெரிய அச்சகத்தை உருவாக்கினேன். அதன் பிறகு, லாரிகளை வாங்கி, லாரி ஓனராக இருந்தேன். இதையடுத்து, சென்னைக்குச் சென்று படத்தொழிலில் ஈடுபட்டேன். பல திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தேன். அதன் வளர்ச்சி, படத் தயாரிப்பாளராக ஆனேன். இப்படி, நான் ஈட்டிய பணத்தின் மூலமாகத்தான் என்னுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் பெயரில், அறக்கட்டளையை 1991-ம் ஆண்டு தொடங்கினேன். இந்த அறக்கட்டளையின் நிறுவனராக இருந்து, அதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை நாங்கள் உருவாக்கினோம். இந்தப் பகுதியில், நாங்கள் தொடங்கிய கல்லூரிகளால் பல என்ஜினீயர்கள் உருவாக்கி யிருக்கின்றனர்.

எ.வ.வேலுவின் கல்லூரி

இந்த அறக்கட்டளை மூலமாக கல்வி நிறுவனங்களை நான் தொடங்காமல் போயிருந்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதாவது கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டிருக்குமா… கிராமத்துப் பிள்ளைகள் எத்தனைப் பேர் படித்திருக்க முடியும்? மனசாட்சியுடைய அத்தனைப் பேருக்கும் இது தெரியும்! எனது மூத்த மகன் குமரன்தான் ‘சரஸ்வதி’ அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார். எனக்கும் அறக்கட்டளைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அறக்கட்டளையை விட்டே வெளியில் வந்து விட்டேன்.

இந்த நிலையில்தான் நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டேன். தொடர்ந்து, 6 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, மக்களுக்குத் தொண்டு செய்திருக்கிறேன். நான் பொதுவாழ்க்கையில், ஒழுக்கத்தை கடைபிடித்துக் கொண்டிருப்பவன். என் வீட்டிலோ, என் மனைவி வீட்டிலோ, என் 2 மகன்கள் வீட்டிலோ அல்லது கல்லூரி வளாகத்திலோ ஒரே ஒரு பைசா கைப்பற்றியிருந்தால், அதற்கு நான் பதில் சொல்கிறேன். அவனவன் தொழில் செய்கிறான். தொழில் செய்கிற இடத்தில் அவன் கணக்கு காட்டாமல், ரெய்டு நடத்தும்போது பணம் கிடைத்ததாகச் சொன்னால், அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?! எங்களிடம் இருந்து ஒரு பைசா கூட அவர்கள் எடுக்கவில்லை. 48 ஏக்கர் 33 சென்ட் நிலம் மட்டுமே நேரடியாக எனக்கு இருக்கிறது. காந்தி நகரில், வீடு கட்டும் சங்கத்தின் மூலம் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்று சொன்னபோது, 33 ஆண்டுகளுக்கு லீஸுக்கு கொடுத்திருக்கிறேன். சென்னையில் ஒரேயொரு வீடு இருக்கிறது. இவ்வளவுதான் என் சொத்து. இதைத்தான் தேர்தல் பிரமாண பத்திரத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

அமைச்சர் பதவிக்கு வந்தப் பிறகு, ஒரு சென்ட் நிலத்தைக்கூட வாங்கி சொத்தாக சேர்த்துக்கொள்ள வில்லை. ஒவ்வொரு ஆண்டும் வருமானவரித் துறைக்கு எனக்கு வரவு-செலவு கணக்கை சரியாக தாக்கல் செய்துவருகிறேன். வருமானவரித் துறையை ஏமாற்றுபவன் நான் அல்ல. என்னிடம் மக்கள் மனு அளிக்க வருவது தவறா? என்னுடன் தொடர்புப்படுத்தி அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவது நியாயமா? பா.ஜ.க-வில் தொழில் அதிபர்களே இல்லையா… அங்கெல்லாம் வருமானவரித் துறை போகிறதா? தி.மு.க மீது மட்டும் வருமானவரித் துறையினர் ரெய்டுக்கு வருவது ஏன்? இந்த ரெய்டுக்கெல்லாம் நாங்களோ, தி.மு.க-வோ, முதலமைச்சரோ பயப்படப் போவதில்லை.

அமைச்சர் எ.வ.வேலு

காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. காசா கிராண்ட் யாரென்றே எனக்குத் தெரியாது. அப்பாசாமி என்பவர், நான் கோயம்புத்தூர் சுற்றுப்பயணம் போகிறபோது, அங்கு அரசு விடுதி கிடைக்காதத சமயத்தில், அப்பாசாமியின் ரெசிடன்ஸி ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். அதைத் தவிர அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமும் கிடையாது. ‘காசா கிராண்ட்டிலும், அப்பாசாமியிலும் ரூ.500 கோடி பிடித்துவிட்டார்கள். ரூ.200 கோடி பிடித்துவிட்டார்கள்’ என்று தொலைக்காட்சிகளில் செய்தி வந்தது. 100 சதவிகிதம் சொல்கிறேன். .

ரெய்டு மூலமாக எங்களை அடக்கிவிட முடியாது. இந்த ரெய்டால் 5 நாள்கள் எனது அரசுப்பணி முடங்கி யிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவையே பார்த்தவர். அவரின் அரவணைப்பில் இருப்பவர்கள் நாங்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்களின் இலக்கு. அந்தத் தேர்தலில், நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை வென்று காட்டுவதே குறிக்கோள். அந்த குறிக்கோளை முன்வைத்தே நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.