ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்களும், வாக்குப் பதிவுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக 40 இடங்களுக்கும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 இடங்களுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், சத்தீஸ்கரில் சுமார் 70 சதவிகித வாக்குகள் நேற்று பதிவாகியிருக்கின்றன. இந்த நிலையில், சத்தீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட்டாக கையில் துப்பாக்கிய ஏந்திய பெண், தனது வாழ்நாளில் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்திருக்கிறார்.
சுமித்ரா சாஹூ என்று அறியப்படும் இந்தப் பெண், சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாராயண்பூரிலுள்ள மாவோயிஸ்ட்டுகளின் ஆம்டை பகுதிக் குழுவின் தீவிர தளபதியாக, கையில் துப்பாக்கி ஏந்தினார். கடேனார் கிராமத்தில் வசிக்கும் இவர் முதன்முதலாக, 2004-ல் சி.பி.ஐ-ன் (மாவோயிஸ்ட்டுகள்) கலாசார பிரிவான சேத்னா நாட்டிய மண்டலியின் உறுப்பினராக, அன்றைய கிழக்கு பஸ்தார் பிரிவு செயலாளர் ஊர்மிளாவால் பணியமர்த்தப்பட்டார்.
அதன்பிறகு 2018-ல், கடோனரில் முகாமிட்டிருந்த போலீஸார் நடத்திய என்கவுன்டரில், அவரின் ஆறேழு சக தோழர்கள், கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கத்திலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து 2019-ல் காவல்துறை பக்கம் சாய்ந்தார் சுமித்ரா சாஹூ. ஆரம்பத்தில் காவல்துறையில் ரகசிய துருப்பாக இருந்த சுமித்ரா சாஹூ, தற்போது கான்ஸ்டபிளாக இருக்கிறார். சுமித்ரா சாஹூவுக்கு, தனது வாழ்நாளிலேயே முதல்முறையாக வாக்களிக்கும் தேர்தல் இதுவே.
இதுகுறித்து பேசிய சுமித்ரா சாஹூ, “முன்பு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்தபோது, நாடாளுமன்றம், சட்டமன்றம், பஞ்சாயத்து உள்ளிட்ட தேர்தல்களின்போது, மாவோயிஸ்ட்டுகள் கொடுத்த தேர்தல் புறக்கணிப்பு அழைப்பை ஏற்று பிரசாரம் செய்தேன். தற்போது அதிலிருந்து வெளிவந்து, இன்று (செவ்வாய்) முதன்முறையாக எனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
நேற்று வாக்குப் பதிவு நடைபெற்ற சமயத்தில், காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.