அனைத்து நலன்புரி வேலைத்திட்டங்களையும் முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம்

அஸ்வெசும திட்டத்திற்காக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனியான அதிகாரிகள்.

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் (07) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பொது நிருவாக அமைச்சின் அதிகாரிகள் சிலரின் தலைமையில் நடைபெற்றதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல், அஸ்வெசும வேலைத்திட்டத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான அதிகாரிகளை நியமிப்தற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

அத்தோடு அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களை நிவர்த்தித்து முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான இயலுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2002 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்துக்கமைய 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி 2302/23 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியின் ஊடாக வெளியிடப்பட்ட, அமைச்சரவை அனுமதியுடனான ,நலன்புரி கொடுப்பனவுகளை பகிர்ந்தளிக்கும் கட்டளைகளை திருத்தம் செய்து அமுல்படுத்தப்பட்ட 2022 டிசம்பர் 15 ஆம் திகதி 2310/30 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய, வறுமையான மற்றும் மிக வறுமையான குடும்பங்கள் என்ற 04 கட்டங்களின் கீழ் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படுவதோடு, அங்கவீனமான, முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கும் வழமை போன்ற கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

 PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.