வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், ‛‛ ஒரு நாடு, மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளை பாதுகாக்காவிட்டால், அது சர்வதேச உறவுகளை ஆபத்தானதாக மாற்றிவிடும் ” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை அந்நாடு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக டில்லியில் பணியாற்றிய அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்றியது. மேலும், அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், இந்த தீவிரமான விஷயத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறோம் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை இந்திய அரசும், உலக நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள உண்மையான குற்றச்சாட்டுகளை பகிர்ந்து கொண்டோம். இதனால் தான், வியன்னா உடன்படிக்கையை மீறி, கனடா தூதரக அதிகாரிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த உரிமைகளை பறித்து இந்திய அரசு வெளியேற்றிய போது கவலையடைந்தோம்.
கனடா மண்ணில், கனடா குடிமகனை கொலை செய்யப்பட்டதில், இந்திய அரசின் ஏஜென்ட்கள் பங்கு உள்ளது என்பதற்கான தீவிரமான காரணங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால், டில்லியில் இருந்து கனடா தூதரக அதிகாரிகளுக்கு, வியன்னா ஒப்பந்தப்படி அளிக்கப்பட்ட உரிமைகளை பறித்து அவர்களை வெளியேற்றியது இந்தியாவின் பதில் ஆக உள்ளது. இது உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், ஒரு நாடு, மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளை பாதுகாக்காவிட்டால், அது சர்வதேச உறவுகளை ஆபத்தானதாக மாற்றிவிடும். ஆனால், ஒவ்வொரு நடவடிக்கையிலும், இந்தியாவுடன் நேர்மறையாக பணியாற்ற முயற்சித்தோம். தொடர்ந்து அவ்வாறே செயல்படுவோம். இந்திய தூதர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். தற்போது, நாங்கள் இந்த போராட்டத்தை நடத்த விரும்பவில்லை. சட்டத்தின் ஆட்சியின் பக்கம் எப்போதும் நிற்போம். இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement