400 ரன்களை குவித்த இந்தியா – ராகுல், ஸ்ரேயாஸ் சதம் … நெதர்லாந்து பவுலரும் சதம்..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 410 ரன்கள் குவித்தது. இந்த உலக கோப்பையில் இந்திய அணி 400 ரன்களுக்கும் மேல் எடுப்பது இதுவே முதல்முறை. கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 62 பந்துகளில் சதமடிக்க, மறுமுனையில் ஸ்ரேயாஸூம் முதன்முறையாக தன்னுடைய உலக கோப்பை சதத்தை பதிவு செய்தார். இருவரும் 207 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மலைக்க வைத்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தாலேயே இந்திய அணி 400 ரன்களை கடக்க முடிந்தது. இல்லையென்றால் 350 ரன்களுக்கும் மேல் மட்டுமே எடுக்க முடிந்திருக்கும்.

இதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில், விராட் கோலி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூன்று பேருமே அரைசதம் அடித்தனர். ரோகித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்களும், சுப்மான் கில் 32 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர். இதில் ரோகித் 2 சிக்சர்களும், கில் 4 சிக்சர்களும் விளாசினர். இவர்களுக்குப் பிறகு விளையாட வந்த விராட் கோலியும் 51 ரன்கள் எடுத்து அசத்தினார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடித்தளம் அமைத்து கொடுத்ததை ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். நல்ல பந்துகள் கிடைத்துவிட்டால் மைதானத்தின் கேலரியில் தான் பந்துகள் விழுந்தன. இதன் உலக கோப்பையில் மிக குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் கே.எல். ராகுல். அவர் 62 பந்துகளில் சதமடித்தார். இதற்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 63 பந்துகளில் சதமடித்திருந்தார். அந்த சாதனை முடிவுக்கு வந்தது. ஸ்ரேயாஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 94 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன் தான் சதமடித்தார்கள் என்றால் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர் வேன் பீக்கும் சதமடிதார். அவர் 10 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 107 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவருக்குப் பிறகு வான் மீகெரென் 90 ரன்கள் வாரி வழங்கினார். 82 ரன்கள் விட்டுக் கொடுத்த பாஸ் லீட் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனையடுத்து மிக கடினமான இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி 2வது பேட்டிங் ஆடியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.