தீபாவளி பண்டிகையை யொட்டி சொந்த ஊர் திரும்பிய பயணிகளிடம் கட்டணக் கொள்கையில் ஈடுபட்டதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ரூ.18 லட்சம் வரை அபராதமாக வசூலித்துள்ளது தமிழ்நாடு போக்குவரத்து துறை. தொடர்கதையாகும் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்தும், இதற்கு என்னதான் தீர்வு என்பதுகுறித்தும் விசாரித்தோம்.
கடந்த ஆயுத பூஜை விடுமுறையின்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் தொகை வசூலித்ததாக 118 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து, புதிய கட்டணத்தையும் நிர்ணயித்திருந்தது தமிழ்நாடு போக்குவரத்து துறை. அரசின் நடவடிக்கை பலன்தரும் என எதிர்பார்த்து தீபாவளிக்கு ஊர்திரும்பிய பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்பிய பயணிகளிடமும் வசூல் வேட்டை நிகழ்த்தியிருக்கின்றன ஆம்னி பேருந்துகள்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கிட்டதட்ட 5 லட்சத்துக்கும் மேலான பயணிகள் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளின் மூலமும் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர் திரும்பியுள்ளனர், இந்நிலையில் விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க போக்குவரத்துறை அதிகாரிகளும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும், ஆம்னி பேருந்து பயணிகளிடமிருந்து, தொடர்ச்சியான புகார்கள் வரவே பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். நவம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி 6,991 ஆம்னி பேருந்துகளில் 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவரவே… ரூ 18,76,700 லட்சம் வரை அபராதமாக வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரிசெலுத்தாத ஆம்னி பேருந்துகளுக்கு 11 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒருபுறம் பாராட்டுகள் பெறப்பட்டு வந்தாலும், இதனால் மக்களுக்கு என்ன பயன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நம்மிடம் பேசிய தென்மாவட்ட பயணிகள் சிலர், “நாங்கள் எல்லா பண்டிகைக்கும் சொந்த ஊர் திரும்புகிறோம். சாதாரண நாள் கட்டணத்தைவிட பண்டிகை கால கட்டணம் இரண்டு மூன்று மடங்காக இருக்கின்றன. இவை தொடர்கதையாகி விட்டன. சமீப காலமாக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுப்பாதாக காட்டிக் கொண்டாலும் அதில் பயன் இருப்பதாக தெரியவில்லை.
கடந்த ஆயுத பூஜையின்போது 118 பேருந்துகளை சிறைபிடித்ததும், தற்போது 18 லட்சம் அபராதம் விதித்தாலும் அதிக தொகைசெலுத்தி பயணித்த மக்களுக்கு என்ன பயன்? அடுத்தமுறையும் அதிக கட்டணம் வசூலிப்பார்கள், அரசு அபராதம் வசூலிப்பார்கள்..ஆனால் சாமானிய பயணிகள் அதிக கட்டணம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டுமா..” என ஆதங்கப்பட்டனர்.

என்னதான் தீர்வு?
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை அளவுக்கு, அரசுத் தரப்பில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.. இதனால், தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, தனியார் ஆம்னி பேருந்துகள்தான்.மேலும் 2,800-க்கும் அதிகமான பேருந்துகள் உரிமம் பெற்றிருந்தாலும் அவை தினசரி இயக்கப்படுவதில்லை. சுமார் 40% பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
பண்டிகை காலத்தில் மட்டும் எல்லா பேருந்துகளையும் இயக்கி பொதுமக்களிடமிருந்து எவ்வளவு பிழிய முடியுமோ, அவ்வளவு தூரம் பிழிந்துவிடுகிறார்கள். முதலில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். இவை தவிர வேறெந்த நடவடிக்கையும் பயணிகளுக்கு உதவாது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.