பெங்களூரு, கர்நாடக அரசின் பல்வேறு வாரியங்கள் மற்றும் கழகங்களில் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் எழுத்து தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, பெண்கள் தலையை மறைக்கும் விதமான உடைகளை அணிந்து வர, மாநில பணியாளர் தேர்வாணையம் தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
விசாரணை
இந்த மாநிலத்தில், கடந்த மாதம் நடந்த கல்லுாரி மாணவ – மாணவியருக்கான போட்டி தேர்வில், முஸ்லிம் மாணவியர், ‘ஹிஜாப்’ எனப்படும், தலையை மறைக்கும் துணியை அணிந்து தேர்வு எழுத மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் அனுமதி அளித்தார்.
இதற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
கலபுரகி மற்றும் யாத்கிர் மாவட்டங்களில் நடந்த போட்டி தேர்வுகளில், சில மாணவியர், ‘ப்ளூடூத்’ கருவியை பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதியது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த, மாநில சி.ஐ.டி., போலீசுக்கு கடந்த 11ம் தேதி, அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடக அரசின் பல்வேறு வாரியங்கள் மற்றும் கழகங்களில், ஆட்சேர்ப்புக்கான எழுத்து தேர்வுகளை, வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் மாநில பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
இந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, பெண் தேர்வர்கள் தலையை மறைக்கும் விதமான ஆடைகளை அணிய தேர்வு ஆணையம் தடை விதித்துள்ளது.
ஹிஜாப் மட்டுமின்றி அனைத்து விதமான ஆடைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, தேர்வு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
போராட்டம்
பெண்கள் உயரமான, ‘ஹீல்’ வைத்த காலணிகள், ஜீன்ஸ் பேன்ட், டி - ஷர்ட்கள் அணிய தடை விதிக்கப்பட்டுஉள்ளது. ஆண் தேர்வர்கள், அரை கை சட்டை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த 6ம் தேதி நடந்த கர்நாடக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தேர்வில், பெண் தேர்வர்கள் தாலியுடன் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தாலி மற்றும் மெட்டியுடன் தேர்வு எழுத ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியின்போது, வகுப்பறையில் மாணவியர் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.
தற்போது காங்., ஆட்சி நடக்கும் நிலையில், அரசு பணிக்கான ஆட்சேர்ப்பு தேர்வில் மாணவியர், தலையை மறைக்கும் வகையிலான உடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்