ISRO-NASA joint radar to be launched next year | அடுத்தாண்டில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ – நாசா கூட்டு ரேடார்

பெங்களூரு, பூமியை சுற்றி வந்து அதன் நிலப்பரப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக, ‘இஸ்ரோ’ மற்றும் ‘நாசா’ அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள, ‘நைசர்’ எனப்படும் ஆய்வு ரேடார், அடுத்தாண்டின் முதல் காலாண்டில் செலுத்தப்பட உள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ இணைந்து, விண்வெளி பயணத்தை மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் செய்து உள்ளன. இதன்படி, நைசர் எனப்படும் நாசா – இஸ்ரோ செயற்கை துளை ரேடாரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

துல்லியமான ஆய்வு

கடந்த, 2021ல் இதை அனுப்ப திட்டமிடப்பட்டு, பல காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த திட்டம் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த திட்டத்தின்படி, இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கியுள்ள செயற்கை துளை ரேடார், விண்வெளியில் இருந்து பூமியை ஆய்வு செய்யும்.

பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், பனிப்பாறைகள் உருகுவது, கடலில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை முன்னதாகவே அறிந்து கொள்ளவும் இது உதவும்.

இந்த திட்டத்தின்படி, இந்த ரேடார், 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை முழுமையாக சுற்றி வந்து ஆய்வு செய்யும். மேகங்கள் மறைத்தாலும், இருளாக இருந்தாலும், பூமியை இந்த ரேடார் வாயிலாக துல்லியமாக ஆய்வு செய்ய முடியும்.

இஸ்ரோவின், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ரேடார் அனுப்பப்பட உள்ளது.

புதிய தகவல்

இந்த பணி குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள, நாசாவின் மூத்த அதிகாரிகளான பில் பரேலா, லுாரி லேஷின் கூறியதாவது:

இதற்கு முன் பூமி குறித்த பல தரவுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து, மிகவும் நுட்பமான, புதிய தகவல்கள் இந்த ஆய்வின் வாயிலாக நமக்கு கிடைக்கும்.

இந்த விண்வெளி பயணத்துக்கான அனைத்து அடிப்படை சோதனைகளும் நடந்து வருகின்றன. அனைத்து சோதனைகளும் முடிந்து, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.