டாஸில் கோல்மால் செய்கிறாரா ரோஹித்…? முன்னாள் பாக். வீரர் சொல்லும் காரணத்தை பாருங்க!

Rohit Sharma Toss Allegation: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்களுக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது. 

இந்திய அணிக்கு வெற்றிக்கு காரணமாக இருந்த ஷமி ஆட்ட நாயகனாக தேர்வானார், அவர் நேற்று 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கில்ல விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்து உதவினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மாவின் தொடக்கம் என்பது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. இந்திய அணி 9 லீக் போட்டிகள், நேற்றைய போட்டிகள் என மொத்தம் 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. 

சொந்த மண் என்பது ஒரு சாதகம் என்றாலும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என இந்திய அணி இதுவரை இல்லாத அளவில் பலம் வாய்ந்ததாக உள்ளது. இருந்தாலும், இந்திய அணி மீது சில குற்றசாட்டுகளும் வைக்கப்படுகின்றன. இந்திய அணி தான் விளையாடும் ஆடுகளங்களில் தலையிடுவதாக புகார்கள் வந்தன. டிஆர்எஸ் போன்ற தொழில்நுட்பங்களையும் தங்களுக்குச் சாதகமாக இந்தியா பயன்படுத்துகிறது என்றும் கூறப்பட்டன.

இந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க முன்னாள் பாகிஸ்தான் வீரர் சிக்கந்தர் பக்த் ரோஹித் சர்மா மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, ரோஹித் சர்மா டாஸ் போடும்போது விநோதமாக போடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்ட பதிவில்,”நீங்கள் நன்றாகப் பார்த்தால், ரோஹித் ஷர்மா டாஸ்க்காக நாணயத்தை சுண்டிவிடும்போது, அவர் எதிரணி கேப்டனிடம் இருந்து வெகு தொலைவில் வீசுகிறார். 

டாஸின் உண்மையான முடிவு என்ன என்பதை மற்ற கேப்டன் உண்மையில் பார்க்க முடியாது. ரோஹித் சர்மா டாஸில் நாணயத்தை வீசிய விதம் மிகவும் விசித்திரமானது, வெகு தொலைவில், மற்ற கேப்டன்களை பார்க்க விடாத வகையில் உள்ளது. உலகக் கோப்பையின் மற்ற கேப்டன்களுடன் ஒப்பிட்டு பாருங்கள், அதற்கு ஏதும் காரணம் இருக்கிறதா?” என குறிப்பிட்டுள்ளார். 

இந்திய அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி தலா 5 டாஸ்களில் வென்றுள்ளது, 5 டாஸ்களை தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் ரோஹித் டாஸை தோற்றார். ஆனால் இப்போது நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி உட்பட தொடர்ச்சியாக மூன்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஒருவர் இந்தியாவின் வெற்றியைச் சுற்றி சில வழக்கத்திற்கு மாறான கோட்பாட்டுடன் வருவது இது முதல் முறை அல்ல. முன்னாள் வீரர் ஹசன் ராசாவும், இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பு இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த ஒரு சிறப்பு பந்துகள் வழங்கப்படுவதால், பந்து மூலம் அதிக மூவ்மண்டை கொண்டு வருகிறார்கள் என குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.