செமி பைனல்னா Choke ஆவோம்… அடுத்தடுத்து விக்கெட்டை விட்ட தென்னாப்பிரிக்கா – இதுதான் காரணம்?

SA vs AUS Match Update: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸை வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலியாவில் ஸ்டாய்னிஸ், சீன் அபாட் ஆகியோருக்கு பதிலாக ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பினர். தென்னாப்பிரிக்கா அணி சேஸிங்கில் திணறி வருவதால் முதலில் பேட் செய்ய தீர்மானித்தனர். ஆனால், அது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மழை மேகங்கள் மைதானத்தை சூழ்ந்ததால் ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட்டுக்கு பந்து நன்றாக நகர்ந்தது. 

பேட்டர்கள் டிரைவிற்கு சென்றபோதெல்லாம் ஸ்லிப்பில் நின்றவர்களுக்கே பந்து நேராக சென்றது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பீல்டிங்கால் தென்னாப்பிரிக்கா திணறியது. டெம்பா பவுமா ஸ்டார்க் பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே டக்கவுட்டாக, டி காக் ஹசில்வுட் வீசிய ஆறாவது ஓவரில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தென்னாப்பிரிக்கா முதல் 10 ஓவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 11ஆவது ஓவரையும் ஸ்டார்க் வீசினார். 

அந்த ஓவரில் மார்க்ரம் 10 ரன்களில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து காலியானார். ஹசில்வுட் வீசிய அடுத்த ஓவரிலேயே வான் டெர் டெசனும் ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்க டாப் நான்கு பேட்டர்களையும் இழந்தது. 14ஆவது ஓவரை வீசிய கம்மின்ஸ் 12 ரன்களை கொடுக்க 14 ஓவர்களில் 44 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை 3.55 மணிக்கு போட்டி தொடங்கியது. 

தென்னாப்பிரிக்கா அணிக்கும் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கும் ஏகப் பொருத்தம் இருக்கும். இதுவரை அரையிறுதி அந்த அணி தாண்டியதே இல்லை. 1992ஆம் ஆண்டில் இருந்து உலகக் கோப்பையில் விளையாடும் தென்னாப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் இருந்தது. ஆனால், அவர்களின் வழக்கமான அழுத்தம் நிறைந்த அணுகுமுறை இன்றும் தொடர்ந்ததால் அவர்கள் ஆரம்பித்திலேயே தடுமாறியுள்ளனர். 

கிளாசெனும், மில்லரும் களத்தில் இருந்தாலும் இந்த இணை ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய சூழலில் உள்ளன. அதிகமாக அழுத்தத்தை ஏற்றுக்கொள்வதால் தென்னாப்பிரிக்காவால் லீக் சுற்று போட்டிகளில் அசத்தியதை போன்று அரையிறுதியில் சரியான இன்னிங்ஸை கட்டமைக்க முடியவில்லை என தெரிகிறது. தற்போது கிளாசெனும், மில்லரும் அந்த அழுத்தமின்றி நிதானமாக பார்ட்னர்ஷிப்பை வளர்க்கவே நினைக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.