மயிலாடுதுறை: கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், மயிலாடுதுறை ஐயன் குளத்தை சுற்றி அமைக்கப்பட்டு வரும் நடைபாதை சரிந்து சேதமடைந்துள்ளது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் எதிரில் உள்ள ஐயன் குளத்தில் ரூ.94.45 லட்சம் மதிப்பில் ஃபேவர் பிளாக் நடைபாதை, தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால், ஐயன் குளத்தை சுற்றி அமைக்கப்பட்டு வரும் நடைபாதை சரிந்து சேதமடைந்துள்ளது. 2 நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் நடைபாதை சரிந்து விழுந்ததால், பணிகள் தரமாக நடைபெறவில்லை என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு, தரமான வகையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் கூறியது: நடைபாதை அமைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. இன்னும் சிறிது தொலைவு அமைக்கப்பட வேண்டியுள்ளது. தற்போது சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் மரம் ஒன்று இருந்தது. அதை அகற்றி விட்டு பாதை அமைக்கப்பட்டது. மழையின் காரணமாக மரம் இருந்த இடத்தில் மண் உள் வாங்கியதால் அந்த இடத்தில் மட்டும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர். இதேபோல, திருவாரூரில் செட்டியார் குளத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு வரும் நடைபாதையின் ஒரு பகுதி நேற்று முன்தினம் மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது