The Mandal period began at Sabarimala with a large number of devotees darshan | சபரிமலையில் தொடங்கியது மண்டல காலம் திரளான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை:பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. புதிய மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் பக்தர்களின் சரண கோஷம் விண்ணை தொட்டது.

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜைகள் சபரிமலையில் மண்டல காலம் எனப்படுகிறது. பக்தர்களை வரவேற்க சபரிமலை தயாராகியுள்ளது.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனரரு மண்டல கால அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின் கணபதிஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடை பெற்றது.

டிச., 27 வரை தினமும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து மதியம் ஒரு மணிக்கும், மாலை 4:00 மணிக்கு நடை திறந்து இரவு 11:00 மணிக்கும் நடை அடைக்கப்படும். தினமும் மதியம் கலசாபிஷேகம், களபாபிஷேகம் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையாக நடைபெறும்.

கார்த்திகை ஒன்றாம் தேதியான நேற்று அதிகாலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நீண்ட வரிசையில் பக்தர்கள் 18 படி ஏற காத்திருந்தனர். மதியம் கூட்டம் சற்று குறைந்தது. மாலையில் மீண்டும் அதிகமான பக்தர்கள் வந்தனர்.

குடிநீர், கழிப்பறைகள்

மண்டல காலத்தில் வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் முதல் பம்பை வரை வழி நெடுகிலும் குடிநீர் வசதி, இரண்டாயிரத்து 500 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பையில் இருந்து சன்னிதானம் வரை ஆங்காங்கே ஆக்ஸிஜன் பாய்லர்களும் அவசர சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

சன்னிதானம் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப் படும் நோயாளிகளை கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்ல இரண்டு ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன.

கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணன் நிலக்கல் முதல் சன்னிதானம் வரை பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நேற்று சன்னிதானத்தில் தேவசம்போர்டு, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அன்னதானம் மாற்றம்

கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆண்டு முதல் ஐயப்பா சேவா சங்கத்தில் அன்னதானம் வழங்கப்படவில்லை. தேவசம்போர்டு சார்பில் மாளிகைபுரம் கோயில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படும். அங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் அமர்ந்து சாப்பிடலாம். கூடுதலாக ஒரு இடத்தில் அன்னதானம் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் நமது நிருபரிடம் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.