j&k: ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சத்தம்… என்னதான் நடக்கிறது அங்கு?

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மோடி தலைமையிலான பா.ஜ.க அரசால் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, அதிரடியாக ரத்துசெய்யப்பட்டது. பிறகு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் மாற்றப்பட்டது. அங்கு தேர்தல் நடத்தப்படாததால், ஜம்மு காஷ்மீர் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது.

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துவிட்டதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஜம்முவிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நவம்பர் 22-ம் தேதி கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில், இரண்டு ராணுவ கேப்டன்கள் உட்பட நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, பஜிமால் என்ற பகுதியில் நவம்பர் 23-ம் தேதி ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த குவாரி என்ற பயங்கரவாதி உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறுகிறது. அந்த பயங்கரவாதி ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பயிற்சி பெற்றவர் என்றும் ராணுவத்தினர் கூறுகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர்

அதேபோல, குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில மாதங்களில், பயங்கரவாதிகளுடனான மோதல்களில் ராணுவ உயர் அதிகாரிகளும் உயிரிழந்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், இரு ராணுவ உயர் அதிகாரிகளும், போலீஸ் டி.எஸ்.பி ஒருவரும் கொல்லப்பட்டனர்.

பல ஆண்டுகளாக அமைதி நிலவி வந்த அனந்த்நாக் மாவட்டத்தில் சமீபத்தில் பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த மாவட்டத்திலுள்ள பீர் பஞ்சால் பகுதியில், 2021 ஜனவரி மாதத்திலிருந்து 2023 மே மாதம் வரையில் பாதுகாப்புப் படையினர் 25 பேரும், பொதுமக்களில் 75 பேரும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர்

பஞ்சாப், நேபாளம் வழியாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவும் போக்கு அதிகரித்திருப்பதாக ராணுவத்தினர் கூறுகிறார்கள். அவ்வாறு ஊடுருவும் பயங்கரவாதிகள் பீர் பஞ்சால் பகுதிக்கு வருகிறார்கள். பீர் பஞ்சாலிலுள்ள அடர்ந்த வனம், பயங்கரவாதிகள் பதுங்குவதற்கு வசதியாக இருக்கிறது. அந்தப் பகுதியில் பதுங்கியிருந்து அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்கிறார்கள் ராணுவத்தினர்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, டி.ஆர்.எஃப் என்ற பாகிஸ்தான் ஆதரவுபெற்ற பயங்கரவாத அமைப்பு தொடர்ச்சியாக பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. ‘லஷ்கர் இ தொய்பா’-வால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள். அதில், 2022-ம் ஆண்டு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 42 வெளிநாட்டவர்கள் உட்பட 171 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையும் மீறி டி.ஆர்.எஃப் பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்திய ராணுவ வீரர்கள் – ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், அங்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று ஃபரூப் அப்துல்லா, மெஹபூபா முப்ஃதி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நிர்வாகம் இருந்தால்தான், பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்துவதில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், பயங்கரவாதத் தாக்குதல்களும் என்கவுன்ட்டர் சம்பவங்களும் அங்கு தொடர்கதையாக மாறியிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர்

மத்திய பா.ஜ.க அரசோ, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துவிட்டதாகவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுவருகிறது. தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மட்டுமே ஆட்சியாளர்களிடமிருந்து பதில் இல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.