அமெரிக்க அதிபர் பைடனின் அறிவுரை: போர் நிறுத்தத்தை நீட்டிக்கிறதா இஸ்ரேல் – ஹமாஸ்?

டெல் அவிவ்:இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய்ரகளும், பாலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க அதிபர் பைடனும் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்கத் தோதாக போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்க, இருதரப்பினருக்கும் சரிசமமான சுதந்திரம், மாண்பை உறுதி செய்ய வேண்டும். அதுவே தீர்வாகும். இந்த இலக்கை எட்டும்வரை நாங்கள் (அமெரிக்கா) ஓயமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் 50 பேரும், சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களில் 150 பேரும் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபருடன் பேசியபோது, “ஹமாஸ் விடுவிக்கும் 10 இஸ்ரேலியப் பிணைக் கைதிகளுக்கும் மாறாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதேவேளையில் பிணைக் கைதிகளை விடுவித்த பின்னர் மீண்டும் இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காசா சென்ற நெதன்யாகு: முன்னதாக காசா பகுதிக்கு பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து சென்ற இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்கிருந்த வீரர்களுடன் ஆலோசித்தார். பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் “இஸ்ரேல் நிச்சயம் அனைத்துப் பிணைக் கைதிகளையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவரும். அந்த முயற்சியில் நம்மை எதுவும் தடுக்காது” என்று கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 240 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 14,800 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.