கர்நாடகா மாநிலம், துமகுருவை அடுத்த சதாசிவ நகர்ப் பகுதியில் வசித்தவர் கரீப். இவருக்குத் திருமணமாகி, சுமையா என்ற மனைவியும், ஹாஜிரா, ஷபான், முனீர் ஆகிய குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை முதல், கரீபின் வீட்டுக் கதவு திறக்கப்படாத நிலையில், அண்டை வீட்டார் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்தபோது, மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக இருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டக் காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், காவல்துறைக்கு தம்பதி எழுதிய கடிதமும், ஒரு வீடியோ ஆதரமும் கிடைத்தது. அதில், `அதிக கடன் சுமை இருக்கிறது. மேலும், இந்தக் குடியிருப்பில் இருப்பவர்களும் எங்களை நிம்மதியாக வாழவிடவில்லை. அதனால், இந்தத் துயரமான முடிவை எடுத்திருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்திருக்கின்றனர். இந்தத் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை, சந்தேகத்தின்பேரில் ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறது.