தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கஞ்சா போதையால் நிகழும் குற்றச் சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மாநகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை ஒட்டுமொத்த மாநிலமே கஞ்சா புகலிடமாக மாறிக்கொண்டிருக்கிறது என அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா, நா.த.க உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்?

கஞ்சா போதை – தொடரும் குற்றச் சம்பவங்கள்:
கஞ்சா கடத்தல், விற்பனை, கைது, போதையில் தகராறு, கொலை, வழிப்பறி, காவலர்கள் பணியிடை நீக்கம் என தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் கஞ்சா தொடர்பான நூற்றுக்கணக்கான செய்திகள் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில், இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்திருக்கின்றன. அவற்றில் முக்கியமான சம்பவங்கள் சில…
சம்பவம் 1: கடந்த சில நாள்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம், தொளார் கிராமத்தைச் சேர்ந்த சேவாக் என்ற இளைஞர் வேலை கிடைக்காத விரக்தியில், கஞ்சா போதைக்கு அடிமையாகியிருக்கிறார். அந்த நிலையில், தன்னுடைய தாய் கஸ்தூரியிடம் கஞ்சா வாங்குவதற்குப் பணம் கேட்க, அவர் கொடுக்காமல் மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சேவாக், தாய் கஸ்தூரியைக் கொலைசெய்து, வீட்டுக்குள்ளாகவே குழிதோண்டி புதைத்திருக்கிறார்.
சம்பவம் 2: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர் கஞ்சா போதையில், தனது வீட்டின் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களிடமெல்லாம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதை குடியிருப்புவாசிகள் வினோத்தின் தந்தை அந்தோணி தாஸிடம் புகார் செய்திருக்கின்றனர். அதையடுத்து அந்தோணி தாஸ் தன்னுடைய மகன் வினோத்தைக் கண்டிக்கவும், அதனால் ஆத்திரமடைந்த வினோத், தந்தை என்றுகூட பார்க்காமல் ஓட ஓட விரட்டி, கத்தியாலேயே குத்திக் கொலைசெய்திருக்கிறார்.
சம்பவம் 3: திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் என்ற பகுதியில், தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வந்த இளைஞர்களை ஆயுதங்களுடன் வழிமறித்த `கஞ்சா போதை கும்பல்’ ஒன்று, அந்த இளைஞர்களின் சாதி குறித்து கேட்டு மிரட்டியிருக்கிறது. பயத்தில் உறைந்த இளைஞர்கள் `பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று கூற, அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள்மீது சிறுநீர் கழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கிறது அந்தக் கும்பல்.

சம்பவம் 4: திருவாரூர் மாவட்டம், கல்யாண மஹாதேவி, மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், கஞ்சா போதையில் அரிவாளுடன் கமலாபுரம் பகுதி கடைத் தெருவுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கு பெரும் ரகளையில் ஈடுபட்ட சிவா, சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை மறித்து அடித்து நொறுக்கியதுடன், அருகிலிருந்த டீக்கடை உள்ளிட்டக் கடைகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறார். இதை தட்டிக்கேட்க வந்த பொதுமக்கள் இருவரையும், அரிவாளால் வெட்டியிருக்கிறார்.
நம்பவம் 5: சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் சீருடையிலிருந்த காவலரை, கஞ்சா போதை தலைக்கேறிய மூன்று இளைஞர்கள் கத்தியுடன் துரத்தும் காணொளி, சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது. இதேபோல சென்னை அண்ணா நகரில், கஞ்சா போதையில் கார் ஓட்டிய விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவை தவிர, தேனியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரைப் பிடிக்க முயன்ற போலீஸ் ஏட்டுமீது 17 பேர் கொண்ட குழு தாக்குதல்; ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே 100 கிலோ கஞ்சா கடத்திய கும்பல், காவலர்களைக் கண்டதும் தப்பியோட்டம்; கடலூரில் கஞ்சா போதையில் காவலரைக் கத்தியால் குத்திய நபர் என `கஞ்சா’வால் நிகழ்ந்திருக்கும் குற்றச் சம்பவங்களை ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம். மேற்கூறிய அனைத்து சம்பவங்களிலும் குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைதுசெய்தாலும், கஞ்சா விற்பனையைத் தடுப்பதிலும், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதிலும் தொடர்ந்து கோட்டைவிட்டு வருவதாக, சரமாரியாக விமர்சிக்கின்றார்கள் சமூக ஆர்வலர்கள்.
சீக்ரெட் அசைமென்ட், பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள்:
தமிழ்நாடு காவல்துறையில் `கஞ்சா வேட்டை 3.0′ மூலம் கஞ்சாவை ஒழிப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பல்வேறு சவால்களும் குறுக்கிடுகின்றன. குறிப்பாக, கஞ்சா வியாபாரிகளின் நூதன விற்பனைகள், கடத்தல் ஒருபுறமிருக்க, அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், பிசினஸ் பார்ட்னராகவும் காவல்துறைக்குள் `கறுப்பு ஆடு’களாக இருக்கும் காவல் அதிகாரிகளே அதற்கு தடையாக இருக்கின்றனர். இதைக் கருத்தில்கொண்டுதான், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து, முழு ரிப்போர்ட் கொடுக்க உளவுப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு மேலிடம் சார்பில் சீக்ரெட் அசைமென்ட் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தைத் தடுப்பதில் மெத்தனம் காட்டிய மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த 25-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 9 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல காவலர்கள், அதிரடியாக காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும், அவர்களை வெளி மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார் டி.ஜி.பி சங்கர் ஜிவால்.

`நடவடிக்கை போதாது, 20,000 பிரத்யேகக் காவலர்கள் தேவை!’
எத்தனை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கஞ்சா பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், காவல்துறை திணறிவருவது கண்கூடு. அதற்கு தீர்வாக, பா.ம.க தலைவரான அன்புமணி ராமதாஸ் ஒரு யோசனையையும் தெரிவித்திருக்கிறார். அதாவது, “தமிழக காவல்துறை கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 என நடத்தி வருகிறது. ஆனாலும், கஞ்சா வணிகம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது; கஞ்சா போதையில் காவலரையே துரத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், காவல்துறையினர் நடத்தும் கஞ்சா வேட்டையால் என்ன பயன் என்று தெரியவில்லை. எனவே, கஞ்சா போன்ற போதைப்பொருளை ஒழிப்பதற்கென்று பிரத்யேகமாக 20,000 காவலர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற `போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், `போதைப்பொருள்கள் ஒழிப்பில் சர்வாதிகாரியாகச் செயல்படுவேன்’ என்று கூறினார். அவர் உண்மையாகவே சர்வாதிகாரியாக மாறி, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருள்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.