India Women’s National Cricket Team: ஐபிஎல் ஆடவர் மற்றும் மகளிர் தொடர்கள், ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) என இந்தாண்டு இரண்டு பெரிய கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்றன. மேலும், கொரோனா தொற்று காலகட்டத்திற்கு அதிக பார்வையாளர்களுடன் இந்த தொடர்கள் நடைபெற்றதை நாம் பார்த்திருப்போம். ஐபிஎல் தொடர்களில் அனைத்து போட்டிகளும் நிரம்பி வழிந்தன. மும்பை, கொல்கத்தா, டெல்லி என மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போட்டிகள் நடைபெற்றன.
உலகக் கோப்பை தொடருமே ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்றது. இப்படி நாடு முழுவதும் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற்றதால் பல்வேறு வகையிலான பார்வையாளர்களும் மைதானத்திற்கு வருகை தந்தனர். ஐபிஎல் (IPL 2024) மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே ஆதரவு இருக்கும் என கூறப்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடருக்கும் பெரும் மக்கள் கூட்டம் வந்தது கிரிக்கெட் ஆர்வலர்கள் இடையே உற்சாகத்தை எழுப்பி உள்ளது. அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள நிலையில், உலகளவில் கிரிக்கெட்டை கொண்டு செல்ல ஐசிசி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பல முன்னெடுப்புகள்
அதே பாணியில் ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் வரவேற்பும், கவன ஈர்ப்பும் மகளிர் போட்டிகளுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக உள்ளது. இது ரசிகர்கள் தரப்பில் மட்டும் இல்லாமல் நிர்வாக ரீதியாகவும் மகளிர் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு அளிக்கப்படுவதில்லை என கூறப்படுவது உண்டு. அதனை சீர்த்திருத்தும் வகையில் ஆடவர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு ஒரே அளவில் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ கடந்தாண்டு அறிவிப்புவிடுத்திருந்தது வரலாற்று சிறப்புமிக்கதாகும். அந்த வகையில், தற்போது மைதானத்திற்கு ரசிகர்களை வர வைக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (Maharastra Cricket Association) அசாத்திய நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.
இலவசம்
மும்பை வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானம் ஆகியவற்றில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உடனான இந்திய அணியின் போட்டிகளை மைதானத்தில் காண இலவச அனுமதியை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நேற்று (நவ. 29) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க செயலாளர் அஜிங்கயா நாயக் கூறுகையில்,”மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் வாரியமும் இணைந்து மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஒருமனதாக இந்த முடிவை அறிவித்துள்ளனர். இதன்மூலம், மைதானத்தை நிரம்ப செய்வதற்காக மட்டும் வாசல் கதவை திறக்கவில்லை, மகளிர் கிரிக்கெட்டை வளரவைப்பதற்குமான வாசலை திறந்துவைத்துள்ளோம்” என்றார்.
இந்தியா – இங்கிலாந்து தொடர்
இன்று முதல் இந்த கிரிக்கெட் திருவிழா மும்பையில் தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இந்தியா மகளிர் ‘ஏ’ அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நவம்பர் 29, டிசம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வான்கடே மைதானத்தில் மதியம் 1:30 மணி முதல் போட்டி நடைபெறும்.
இந்திய பெண்கள் சீனியர் அணி, இங்கிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. டிசம்பர் 6, 9, 10 ஆகிய தேதிகளில் வான்கடே மைதானத்தில் நடைபெறும். இந்த ஆட்டங்கள் இரவு 7:00 மணிக்கு தொடங்கும். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 முதல் 17ஆம் தேதி வரை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்
டிசம்பர் 21 முதல் 24ஆம் தேதி வரை வான்கடே மைதானத்தில் இந்திய மகளிர் சீனியர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரு அணிகளும் விளையாடுகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 28ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 30ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியும் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் மதியம் 1:30 மணிக்கு தொடங்கும்.
ஜனவரி 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதிக்கொள்கின்றன. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு நடைபெறும்.