பெங்களூரு : கணவருடன் சேர்த்து வைப்பதாகக் கூறி, அரசு பெண் அதிகாரியிடம், எட்டு லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு, தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் பாத்திமா. இவர், நீர்ப்பாசன துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 வயதில் மகள் உள்ளார்.
சாலை விபத்து ஒன்றில் மகளின் இடது கையில் காயம் ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகவில்லை.
தெரிந்த நண்பர் மூலம், நாகமங்களாவை சேர்ந்த நுார் முகமது என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் மகளை அழைத்துச் சென்று, மாற்று மருந்து கொடுத்தார். சில நாட்களில் மகளின் கையில் ஏற்பட்ட காயம் குணமானது. இதனால் நுார் முகமதுவை, பாத்திமா முழுமையாக நம்பினார்.
தனிப்பட்ட பிரச்னைகளை, நுார் முகமதிடம் தெரிவித்தார். “பல காரணங்களால், என் கணவர் என்னை விட்டு விலகி இருக்கிறார். எங்கள் இருவரையும் ஒன்றிணைக்க வேண்டும்,” என, நுார் முகமதிடம் பாத்திமா கூறியுள்ளார்.
இதற்கு சம்மதித்த அவர், 1 லட்சம் ரூபாய் வாங்கினார். சில நாட்களுக்கு பின், “எனக்கு தனிப்பட்ட பிரச்னை ஏற்பட்டுள்ளது. உங்கள் பெயரில் வங்கிக் கடன் வாங்கித் தாருங்கள்,” என, நுார் முகமது கூறியுள்ளார்.
அதன்படி பாத்திமாவும், தன் பெயரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், ஏழு லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
முதல் மாதம் தவணையை கட்டிய நுார் முகமது, இரண்டாவது மாதம் தவணை கட்டாமல் இழுத்தடித்தார். கேட்டும் பலனில்லை.
அதிர்ச்சியடைந்த பாத்திமா, விதான் சவுதா போலீசில் புகார் செய்தார். போலீசார், நுார் முகமதுவை தேடி வந்தனர்.
அவர், துமகூரில் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிரா போலீசாரின் உதவியுடன் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்