பையப்பனஹள்ளி : கருக்கலைப்பு வழக்கில், மேலும் ஒரு நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சிசுக்களை காவிரி ஆற்றில் வீசியது, விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
மைசூரு தனியார் மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக, சென்னை டாக்டர் துளசிராமன், 44, மைசூரு டாக்டர் சந்தன்பல்லால், 45, அவரது மனைவி மீனா, 42, லேப் டெக்னிஷியன் நிஷார், 27, வரவேற்பாளர் ரீஸ்மா, 48, ஆகிய ஐந்து பேரை, பெங்களூரு பையப்பனஹள்ளி போலீசார் கைது செய்தனர்.
கருவை கலைக்க 50 ,000 ரூபாய் வரை வாங்கியதும், கடந்த இரண்டு ஆண்டுகளில், 950 கருக்கலைப்பு செய்த அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியானது. மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இந்த வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மஞ்சுளா, 45, என்பவர், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
இவர், டாக்டர் சந்தன்பல்லாலில் மருத்துவமனையில் வேலை செய்தவர்.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
கடந்த ஒரு ஆண்டாக, டாக்டர் சந்தன் பல்லாலில் மருத்துவமனையில் வேலை செய்தேன். ஒரு மாதத்திற்கு 70 கருக்கலைப்புகள் நடக்கும். ஆறு மாத கருவை கூட வயிற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளோம்.
அந்த கருவை பேப்பரில் சுற்றி, நிஷாரிடம் கொடுத்துவிடுவோம். அவர் அதை காவிரி ஆற்றில் வீசிவிட்டு வருவார்.
நான்கு மாத கருவை, மருத்துவ கழிவுகளில் வீசிவிடுவோம். ரீஸ்மா தான் முதலில் டாக்டருடன் சேர்ந்து கருக்கலைப்பு செய்தார்.
அதன் பின்னர் நான் செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்