சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் சென்னை விரைந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 250 பேர் சென்னை புறப்பட்டுள்ளனர். இவர்கள் ஐந்து பேருந்துகளில் புறப்பட்டுள்ளனர். அதேபோல திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திருவாரூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் என 48 பேர் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
“மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்திலிருந்து சுகாதார மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் 100 பேர் பணிக்கு தேவையான பிளீச்சிங் பவுடர், மரம் வெட்டும் இயந்திரங்கள், துப்புரவு உபகரணங்களோடு காஞ்சிபுரம் புறப்பட்டு உள்ளனர்” என அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் களப்பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
#மிக்ஜம்புயல் மழை இன்னும் நின்றபாடில்லை ! அதே மிக கன மழை ! ஆனால் மழை நின்ற உடன் நடக்கவேண்டிய மீட்பு / நிவாரண பணிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுக்கள் கொண்டு வரும் பணி துவங்கியாச்சு #மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரண… https://t.co/i3haA4k116 pic.twitter.com/elZWFiIqUf
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 4, 2023