Virat Kohli: விராட் கோலியின் ரெஸ்டாரன்ட்டில் அனுமதி மறுப்பு; மனம் நொந்த தமிழ்நாட்டு இளைஞர்!

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்கின்றனர். மும்பை ஜுகு பகுதியில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்குச் சொந்தமாக ரெஸ்டாரன்ட் ஒன்று இருக்கிறது. `ஒன்8 கம்யூன்’ என்ற அந்த ரெஸ்டாரன்ட், மறைந்த முன்னாள் பாடகர் கிஷோர் குமாரின் வீட்டில் அமைந்திருக்கிறது. இங்கு வருபவர்கள் குறிப்பிட்ட ஆடை அணிந்துதான் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மும்பைக்கு வந்து ஜுகு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கினார். விராட் கோலியின் ரசிகரான அவர், கோலியின் ரெஸ்டாரன்ட் குறித்துக் கேள்விப்பட்டு அங்கு செல்ல முடிவுசெய்தார். அந்த இளைஞர் தனது பேக்கை ஹோட்டல் அறையில் வைத்துவிட்டு, நேராக விராட் கோலியின் ரெஸ்டாரன்ட்டுக்குச் சென்றார்.

ரெஸ்டாரன்ட்

மும்பை நட்சத்திர ஹோட்டலில் வேட்டி கட்டிக்கொண்டு வருபவர்களை அனுமதிக்கும்போது, ரெஸ்டாரன்ட்டில் ஏன் அனுமதிக்க மாட்டார்கள் என்று கருதி, வேட்டியைக் கட்டிக்கொண்டு ரெஸ்டாரன்ட்டுக்குச் சென்றார். ஆனால், வாசலில் நின்ற பாதுகாவலர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞர் வேட்டி கட்டிக்கொண்டு சென்றதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். `வேட்டி அணிந்து கொண்டு உள்ளே செல்ல அனுமதி இல்லை’ என்றும், `உள்ளே நுழைய சில ஆடைக் கட்டுப்பாடுகள் இருப்பதாக’வும் தெரிவித்தனர். தமிழ்நாடு இளைஞர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து ரெஸ்டாரன்ட்டுக்கு வெளியில் நின்று வீடியோ எடுத்த அந்த இளைஞர், அதைத் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில், `ரெஸ்டாரன்ட் நிர்வாகத்தின் செயலால், நான் அதிருப்தி மட்டும் அடையவில்லை. நான் மன அளவில் காயமும் அடைந்திருக்கிறேன். நான் தமிழர் கலாசாரப்படி வேட்டி அணிந்துகொண்டு சென்றேன். நான் கலர் வேட்டி அல்லது 3/4 வகை ஆடை அணிந்திருந்து நிராகரித்தால், ஏற்றுக்கொண்டிருப்பேன்.

விராட் கோலியின் ரெஸ்டாரன்ட்டுக்கு வெளியே தமிழ்நாட்டு இளைஞர்

ஆனால், ரெஸ்டாரன்ட் நிர்வாகம் ஒட்டுமொத்த தமிழர்களையும், அவர்களின் கலாசாரத்தையும் அவமானப்படுத்திவிட்டது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோவை 10 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். சிலர் ரெஸ்டாரன்ட் நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.