பெலகாவி : கத்தியால் குத்த கூறியதாக, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சகோதரரும் காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான சன்னராஜ் ஹட்டிகோளி மீது, பா.ஜ., – எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி ஆதரவாளர், போலீசில் புகார் அளித்தார்.
பெலகாவி, ஜெயநகரில் வசிப்பவர் பிருத்வி சிங், 45. கோகாக் பா.ஜ., – எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளியின் ஆதரவாளர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சகோதரரும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான சன்னராஜ் ஹட்டிகோளியின் ஆதரவாளர்கள், பிருத்வி சிங்கின் கையில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இவர், பெலகாவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ‘பிருத்வி சிங்கை, சன்னராஜ் ஹட்டிகோளி கத்தியால் குத்தினார்’ என, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
”பிருத்வி சிங் பொய்யர். கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு நாடகமாடுகிறார். போலீஸ் விசாரணையில் அனைத்தும் தெரியும்,” என, சன்னராஜ் ஹட்டிகோளி கூறினார்.
‘இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பதவி விலக வேண்டும்’ என, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை, அவர் மறுத்து உள்ளார்.
மிரட்டல் வந்தது
இந்நிலையில் ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையத்தில் பிருத்வி சிங் நேற்று அளித்த புகார்:
நான் முன்பு காங்கிரசில் இருந்தேன். 2018ல் எனது வீட்டை தேர்தல் பணிக்காக, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், அவரது சகோதரர் சன்னராஜ் ஹட்டிகோளி குத்தகைக்கு எடுத்தனர். குத்தகை காலம் முடிந்தும், அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை.
இதற்கிடையில் நான் பா.ஜ.,வில் இணைந்தேன். அதன்பின்னர் எனக்கும், லட்சுமி ஹெப்பால்கர் குடும்பத்திற்கும், உறவு சரியாக இல்லை. பா.ஜ.,வில் இணைந்த பிறகு, எனக்கு சில மொபைல் எண்களில் இருந்து மிரட்டல் வந்தது.
நேற்று முன்தினம் குத்தகைக்கு கொடுத்த வீட்டை காலி செய்ய சொன்னதால் எனக்கும், சன்னராஜ் ஹட்டிகோளிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவருடன் வந்த சுஜித், சதாம் ஆகியோர் என்னை மிரட்டியதுடன், ஜாதியை சொல்லி திட்டினர். சன்னராஜ் ஹட்டிகோளி கூறியதால், எனது கையில் இருவரும் குத்தினர். அவர்கள் மூன்று பேர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
சி.பி.ஐ., விசாரணை
இந்த சம்பவம் குறித்து ரமேஷ் ஜார்கிஹோளி நேற்று அளித்த பேட்டி:
பிருத்வி சிங் வீட்டிற்கு, சன்னராஜ் ஹட்டிகோளி வந்து சென்ற காட்சிகள் அடங்கிய, வீடியோ வெளியாகி உள்ளது. அப்படி இருந்தும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. பெலகாவியை, கனகபுராவாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.
சன்னராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய கூடாது என்று, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து, பெலகாவி போலீசாருக்கு அழுத்தம் வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுக்க வேண்டும். சன்னராஜ் மீது வழக்குப் பதியாவிட்டால் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறு இருந்தால்
நடவடிக்கை எடுக்கட்டும்
என் சகோதரர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, போலீசார் விசாரணை நடத்தட்டும். அவர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். இதற்காக எனது அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்ய மாட்டேன். எல்லாவற்றிக்கும் ராஜினாமா கேட்பது தான் அரசியல். இப்படி எல்லாம் நடக்கும் என்று, தெரிந்து தான் அரசியலில் இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு, பெலகாவி கூட்டத்தொடரில் பதில் அளிப்பேன்.
லட்சுமி ஹெப்பால்கர்
அமைச்சர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்