ஜெய்ப்பூர், ராஜஸ்தானில், ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா என்ற கட்சியின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை அடையாளம்கண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில், பிரபலமான ராஜ்புத் தலைவர்களில் ஒருவரும், ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா கட்சி தலைவருமான சுக்தேவ் சிங் கோகமேடி, ஜெய்ப்பூரில் உள்ள வீட்டில், நேற்று முன்தினம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில், சுக்தேவ் சிங் மற்றும் அவருடன் இருந்த இருவர் மீது, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவது பதிவாகி உள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து, ஜெய்ப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சுக்தேவ் சிங் கோகமேடியின் ஆதரவாளர்கள், ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய் பூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
மேலும் அவர்கள், முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், ‘சுக்தேவ் சிங் கோகமேடியின் உயிருக்கு ஆபத்திருப்பதாக பஞ்சாப் போலீசாரிடம் இருந்து எச்சரிக்கை வந்து உள்ளது.
‘இதை கண்டுகொள்ளாமல் ராஜஸ்தான் போலீசார் அலட்சியமாக இருந்துள்ளனர். இதற்கு காரணமாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்’ என்றனர்.
இச்சம்பவம் குறித்து, ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜு ஜெரோஜ் ஜோசப் நேற்று கூறியதாவது:
சுக்தேவ் சிங் கோகமேடியை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், ஹரியானாவைச் சேர்ந்தவர்; மற்றொருவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். விரைவில் இருவரும் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய தாதா ரோஹித் கோதாரா, சுக்தேவ் சிங் கோகமேடி கொலைக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்