வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மீது நடந்த கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க மாஜி புலனாய்வு அதிகாரி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதையடுத்து இந்திய -கனடா நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மீது, கொலை முயற்சி நடந்ததாகவும்,இதில், இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .
இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டி இந்திய அரசின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.
இந்தியா வருகை
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் புலனாய்வு ஏஜென்சியின் முன்னாள் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் இரிக் கார்சிட்டி உறுதி செய்துள்ளார். அடுத்த வாரம் கிறிஸ்டோபர் ரே இந்தியா வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து புலனாய்வு வட்டாரங்கள் கூறுகையில், அமெரிக்க மண்ணில் நடந்துள்ள இந்த கொலை முயற்சி விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்து உள்ளோம்.அதுவும் நாடு விட்டு மற்றொரு நாட்டில் தாக்குதல் நடத்துவது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது இந்தியா தொடர்பானது மட்டுமல்ல; எந்த நாடாக இருந்தாலும், இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்போம்.இந்த விஷயத்தில், இந்திய அரசின் விசாரணை வெளிப்படையாகவும், விரிவானதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
பார்லி., மீது தாக்குதலா?
அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளரான, சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பின் தலைவரான பன்னுான், சமீபத்தில் வெளியிட்ட ஒரு,’வீடியோ’வில், 2001ல் இந்திய பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய டிச., 13ல், மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார். தற்போது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதையடுத்து, பார்லிமென்ட் உட்பட புதுடில்லியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement