ரோஹித், ஹர்திக் பாண்டியா வேண்டாம்… இவரை மும்பை கேப்டனாக்கலாம் – மூத்த வீரர் கருத்து!

IPL 2024 News: வரும் 17ஆவது ஐபிஎல் சீசன் அடுத்தாண்டுதான் நடைபெற உள்ளது. ஆனால், தற்போதே பெரும் எதிர்பார்ப்பு ஆரம்பித்துவிட்டது. ஹசில்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஆர்ச்சர் என முன்னணி வீரர்கள் வரும் டிச. 19ஆம் தேதி ஏலத்தில் (IPL Auction) பட்டியலிடப்பட்டுள்ளனர். ஏலத்தை முன்னிட்டு ரசிகர்கள் இடையே இந்த பதற்றம் எகிறியுள்ளது.

மேலும், இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி தொடராக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் விட மும்பை இந்தியன்ஸ் அணி மீது அனைவரும் கவனமும் குவிந்துள்ளது. திடீரென கடந்த வாரம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்து மீண்டும் ணிக்குள் எடுத்துள்ளது. 

பலமும் குழப்பமும்

ஹர்திக்கின் வருகை மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) பலம் சேர்த்திருந்தாலும், குழப்பத்தையும் சேர்த்தே கொண்டு வந்துள்ளது. ஹர்திக் அணிக்குள் வந்தால் யார் கேப்டன் பொறுப்பை வகிப்பார்கள் என்ற பெரும் கேள்வி அந்த அணியின் முன் உள்ளது. உலகக் கோப்பையில் தோல்விக்கு பின் ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) கூடுதல் தலைவலியை இது கொடுத்திருக்கிறது எனலாம். மேலும், ரோஹித்திற்கு பின் பும்ராவுக்கே (Bumrah) கேப்டன் பதவி செல்லும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஹர்திக் அதிலும் குறுக்கே நிற்பதாகவும், பும்ரா இதனால் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் மூத்த வீரர் அஜய் ஜடேஜா மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த கேப்டன்ஸி  பஞ்சாயத்து குறித்து வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, ரோஹித், ஹர்திக் ஆகியோருக்கு பதில் சூர்யகுமார் யாதவை (Suryakumar Captaincy) மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஓய்வு?

2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க முடிவு செய்தால் சூர்யகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக்க வேண்டும் என அஜய் ஜடேஜா (Ajay Jadeja) ஊடகம் ஒன்றின் நேர்காணலின் போது தெரிவித்திருக்கிறார். மேலும், டி20 உலகக் கோப்பையில் விளையாட நினைக்கும் ரோஹித் மற்றும் பிற இந்திய வீரர்கள் ஐபிஎல் முழு சீசனையும் விளையாடக்கூடாது எனவும் இல்லையெனில் அவர்கள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் என்றும் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளை விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஐசிசி உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறார். சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டு, 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றினார். தற்போது தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.