புதுடில்லி, ”அனைத்து துறைகளும் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதால், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை நாம் தொடர்ந்து தக்கவைத்து வருகிறோம்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு வளர்ச்சி மிக அதிகமாக இருந்தது. உலக அளவில் இது மிக அதிகம். வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை நாம் தொடர்ந்து தக்க வைத்து வருகிறோம்.
சில குறிப்பிட்ட துறைகள் மட்டுமின்றி அனைத்து துறைகளுமே கணிசமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இது சாத்தியமாகி உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்கள் வாயிலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி துறைகளும் பெரும் பங்காற்றி உள்ளன.
உற்பத்தி துறையில் அதிகம் விரும்பப்படும் நாடுகளின் வரிசையில் நாம் இரண்டாவது இடத்தில் உள்ளோம். இந்தாண்டு நவ., 9 வரை நேரடி வரி வசூல், 21.82 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., மாத வசூல் 1.60 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 13.50 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் 2022 ஏப்ரலில் அதிகபட்சமாக 7.8 சதவீதத்தை தொட்டது. ஆனால், இப்போது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தை நெருங்கிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement