கேம் டிசைனராக தன் கரியரைத் தொடங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் சதீஷுக்கு அவரது வீட்டின் கிணற்றிலிருந்து விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழலும் உருவாகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், சதீஷுக்கு மருத்துவம் பார்த்த ரெடின் கிங்ஸ்லி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆனந்தராஜ் என அனைவரும் அந்த இறகினை அடுத்தடுத்து பறித்துவிட எல்லோரும் கனவில் ஒன்றாகப் போய் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த விநோதமான பொருளின் பின்னணி என்ன, பேய்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், கனவிலிருந்து மீண்டார்களா என்ற கேள்விகளுக்கான பதிலை ஃபேன்டஸி கலந்த காமெடியாகக் கொடுத்திருப்பதே இந்த ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’.

கனவில் குழப்பமான மனநிலை, பேய்களைக் கண்டு அலறுவது என சீரியஸான காட்சிகளில் சதீஷின் நடிப்பில் குறையொன்றுமில்லை. காமெடி காட்சிகளில் சில இடங்களில் சிரிப்பே வர வைத்தாலும், ‘கேமர் – பூமர்’ போன்ற வழக்கொழிந்த எதுகை மோனை ஒன்-லைனர்களைத் தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் ஹீரோவின் நண்பர் ரோலை ஹீரோ இல்லாமல் செய்த உணர்வையே தந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் பேய் ஓட்டுபவராக வரும் ரெஜினா கேசன்ட்ரா தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை செய்துள்ளார். ஆனால், அவர் இல்லை என்றாலும் படத்துக்குப் பெரிய பாதிப்பில்லை.
டெம்ப்ளேட் அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் ‘ஓகே ஓகே’ வைப்ஸ் தருகிறார். ஆனால், யூடியூபராக அவர் செய்யும் அலப்பறைகளை ரசிக்க முடியவில்லை. இது தவிர ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், நமோ நாராயணா, ஆதித்யா கதிர் என ஒரு பட்டாளமே சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். இதில் ஆனந்தராஜ் ஒரு சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். எக்ஸார்சிஸ்ட் ஏழுமலையாகப் பேய் ஓட்டும் நிபுணராக நாசர். சீரியஸாக அவர் நடிக்கும் காட்சிகளிலும் சிரிப்பு வரும் அளவுக்குத்தான் ஸ்க்ரிப்ட் இருக்கிறது என்பது மைனஸ். கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் மீமிகை தன்மையால் அவரின் யதார்த்த நடிப்பு படத்தோடு ஒட்டவில்லை.

பேய் படத்துக்கே உண்டான த்ரில்லர் பாணியிலான பின்னணி இசையைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. இதில் காமெடி காட்சிகளுக்குத் தனியாகக் கொடுத்திருக்கும் சவுண்ட் டிராக் ரகளை. சாவு வீட்டில் வரும் ஆங்கிலம் கலந்த பாடலைத் தவிர்த்திருக்கலாம். (சாவு வீட்டு காமெடியையே தவிர்த்திருக்கலாம் என்பது வேறு விஷயம்!) இருள் கலந்த மாய உலகத்துக்கான ஒளியுணர்வை சிறப்பாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா. கனவுலகம் நிஜ உலகம் என மாற்றி மாற்றி வரும் காட்சிகளைச் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ். இருந்தும் இரு பாதைகளிலும் கத்திரி போட வேண்டிய காட்சிகள் ஏராளம். பேய் பங்களா, பிளாஷ்பேக் காட்சிகளில் அரண்மனை எனக் கலை இயக்கத்தில் சிறப்பான ஆக்கத்தினை அளித்திருக்கிறார் மோகன மகேந்திரன். கிராபிக்ஸ் மற்றும் மேக்கப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படம் ஆரம்பித்த விதத்திலேயே கதாபாத்திர அறிமுகத்தைச் சுருக்கி நேராகக் கதைக்குள் சென்றுவிடுகிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் அந்தச் சுருக்கமான அறிமுகத்திலும் ‘உச்’ கொட்டும் நகைச்சுவைகள் வரிசை கட்டிக் கொண்டு வருகின்றன. கனவுலகில் வரும் அமானுஷ்யங்களாகத் திடீரென கதவு மூடுவது, எதிர்பாராத நேரத்தில் கண்ணுக்கு முன்னாள் பேய் வந்து நிற்பது, போன்ற பேய்ப் பட டெம்ப்ளேட்கள் இதிலும் இருக்கின்றன. பார்த்தவுடன் புரிகிற இந்தக் கனவுலகத்துக்கு மீண்டும் ஒரு காட்சி வைத்து விளக்கியது ‘சோதனை’ முயற்சி.

தூங்காமல் இருக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம், யார் உடம்பில் ராபர்ட் ஆவி இருக்கிறது, ஆனந்தராஜ் பேய் வீட்டுக்குள் வரும் விதம் என்று காட்சிகள் ஆரம்பித்த விதத்தில் சுவாரஸ்யம் இருந்தாலும் அதை முடித்த விதம் சொதப்பல்.இப்படி நன்கு தொடங்கி சுமாராக முடித்த உணர்வைப் பல காட்சிகள் தருகின்றன. அதேபோல, மந்திரவாதிகள் தீர்வைச் சொல்வதாகச் சித்திரித்த காட்சிகள் எந்த வரைமுறையும் இல்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. ஃபேன்டஸி படம் என்றாலும் ரெஜினாவை வைத்துச் சொல்லப்படும் ‘அந்த குழந்தையே நீங்கதான் சார்’ போன்ற காட்சிகள் எல்லாம் போங்காட்டம் பாஸ்! கூடவே, மாய உலகம், சூனியம் போன்றவற்றுக்கான விதிகளை முன்னரே சரியாகக் கட்டமைக்காமல், போகிற போக்கில் எழுதியது போன்ற உணர்வு தோன்றுவது படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது.

மொத்தத்தில் `கான்ஜுரிங்’ தலைப்பில் `இன்செப்ஷன்’ பாணியிலான ஒன்லைன், கேட்ட உடனே சுவாரஸ்யம் தருகிறது. ஆனால் அதைப் படமாக்கிய விதத்தில் ‘கான்ஜுரிங்’ காணாமல் போய், காமெடியும் சரியாகப் பொருந்தி வராமல் போய், சுமாரான மற்றுமொரு பேய்ப் படமாக முடிகிறான் இந்த `கண்ணப்பன்’.