ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் புதிய முதல்வராகபஜன்லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். தியா குமாரி, பிரேம்சந்த்பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. பாஜக 115 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.
முதல்வர் பதவிக்கான போட்டியில் வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் ராம்மேக்வால், சி.பி.ஜோஷி, சாமியார் பாலக்நாத், தியா குமாரி உள்ளிட்டோர் முன்வரிசையில் இருந்தனர்.
இதற்கிடையே, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு விருந்து அளித்தார். இதில் கணிசமான எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை வசுந்தரா ராஜே சந்தித்து பேசினார். அதன்பிறகு ராஜேவின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன. பாஜக தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த சூழலில், ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இறுதியில், புதியமுதல்வராக பஜன்லால் சர்மா (55)ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக தியா குமாரி (52), பிரேம்சந்த் பைரவா (54) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பாஜக மூத்த தலைவர் வாசுதேவ் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
டிச.15-ல் பதவியேற்பு விழா: கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பஜன்லால் சர்மா கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோருக்குமனமார்ந்த நன்றி. ராஜஸ்தான் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன். நானும், எனது குழுவும் ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவோம்’’ என்றார்.
பின்னர் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த பஜன்லால் சர்மா ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர்ஏற்றுக் கொண்டார். வரும் 15-ம்தேதி புதிய பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
முதல்முறை எம்எல்ஏ பஜன்லால்: முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன்லால் சர்மா,முதல்முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ராஜஸ்தானின் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர். இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் முக்கிய பதவிகளை வகித்தார்.
துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட தியா குமாரி, ஜெய்ப்பூர் மன்னர் குடும்ப இளவரசி. இவர் ராஜபுத் (ஓபிசி) சமூகத்தை சேர்ந்தவர். இன்னொரு துணைமுதல்வர் பிரேம்சந்த் பைரவா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். முதல்வர் பஜன்லால் சர்மா,பிராமண சமூகத்தை சேர்ந்தவர்.
பாஜகவில் அனைத்து சமூகத்தினருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.