பெலகாவி : ”கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை தோற்கடிக்க, விஜயேந்திரா பணம் அனுப்பினார்,” என்று, பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ‘பகீர்’ குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திராவுக்கு எதிராக, பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில் பெலகாவியில் நேற்று முன்தினம் இரவு, லிங்காயத் மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்சய சுவாமிகளை, அவர் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
லிங்காயத் சமூகத்திற்காக எடியூரப்பாவும், விஜயேந்திராவும் எதுவுமே செய்யவில்லை. விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி கொடுக்கா விட்டால், லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன் என்று, மேலிட தலைவர்களை, எடியூரப்பா மிரட்டி உள்ளார். இதனால் தான், அவருக்கு மாநில தலைவர் பதவி கிடைத்து உள்ளது. எடியூரப்பா மிரட்டலுக்கு, மேலிடம் ஏன் பயந்தது என்று தெரியவில்லை.
ஒற்றுமை
நமக்கு பக்கபலமாக லிங்காயத் சமூக மக்கள் உள்ளனர். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, சமூகத்தை வளர்ச்சி அடைய வைக்க வேண்டும்.
நம் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சோமண்ணா, கோவிந்தராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் 20,000 முதல் 25,000 ஓட்டுகள், வித்தியாசத்தில் வென்று இருப்பார். ஆனால் அவரை வேண்டும் என்றே சாம்ராஜ் நகர், வருணாவில் நிற்க வைத்து தோற்கடித்தனர்.
இதில் விஜயேந்திராவின் பங்கும் உள்ளது. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை தோற்கடிக்கவும், ஷிகாவி தொகுதி பா.ஜ., தலைவர்களுக்கு, விஜயேந்திரா பணம் அனுப்பி உள்ளார்.
இதுபற்றி முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை என்னிடம் கூறினார். அவர் கோவிலுக்கு வந்து, உண்மையை சொல்ல வேண்டும். அப்போது தான் தந்தை – மகன் என்ன செய்தனர் என்று தெரியும்.
சிவகுமாருடன் ஒப்பந்தம்
கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ‘டிபாசிட்’ இழந்தார்.
அவருக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் உள் ஒப்பந்தம் உள்ளது. உள் ஒப்பந்த அரசியல் செய்து, மாநிலத்தின் பெயரை கெடுக்க முயற்சி செய்கின்றனர்.
நமது சமூகத்திற்கு ‘2ஏ’ இடஒதுக்கீடு கேட்டு, பெங்களூரில் போராட்டம் நடத்திய போது, நாம் அனைவரையும் கைது செய்ய, நமது சமூகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப் பாட்டீலை அனுப்பி வைக்க பார்த்தனர்.
இதுபற்றி விஜயேந்திராவுக்கு தெரியும். ஆனால் அவர் நம்மிடம் எதுவும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை யாரோ ஒருவர், மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார்.
பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியது பற்றி, கருத்து தெரிவிக்க பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மறுத்து விட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்