தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பா.ஜ.க பிரமுகரும், திரை பிரபலமுமான ஆர்.கே.சுரேஷ் ஏழு மாதங்களுக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். அவர் துபாயிலிருந்து வந்த வேகத்திற்கு உடனடி விசாரணையைத் தொடங்கியிருக்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அவரிடம் துருவி துருவி கேள்விகேட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் ஆர்.கே. சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த `ஆருத்ரா கோல்டு டிரெடிங்’ என்ற தனியார் நிதிநிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 25% முதல் 36% வரை வட்டி தருவதாகக்கூறி சுமார் 1,09,255 பேரிடம் கிட்டத்தட்ட ரூ.2,438 கோடி வரை மோசடி செய்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து தமிழ்நாடு காவல்துறைக்கு புகாரளித்தனர். அதைத்தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட தமிழ்நாடு காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு, ஆருத்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 21 நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து, சுமார் 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தது. மேலும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த இருப்புத்தொகை ரூ.96 கோடியை முடக்கியதோடு, பலகோடி ரூபாய் மதிப்புடைய சுமார் 100-க்கும் மேற்பட்ட சொத்துக்களையும் முடக்கியது.
தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு நடத்திய சோதனையில், பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில துணைத்தலைவரும், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ்க்கும் இந்த மோசடியில் தொடர்புடையது தெரியவந்தது. அதையடுத்து, ஆர்.கே. சுரேஷை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துவந்த ஆர்.கே. சுரேஷ் திடீரென்று துபாய் சென்று தலைமறைவானார். அதையடுத்து அவருக்கு `லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, `மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றதாக’ ஆர்.கே.சுரேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விளக்கமளித்தனர். அதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸை நிறுத்தி வைத்தும், ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 12-ம் தேதி, பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் எனவும், அதுவரை அவரை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஆர்.கே.சுரேஷ், டிசம்பர் 10-ம் தேதி, துபாயிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்துசேர்ந்தார். அவரை விமான நிலையத்திலேயே தடுத்துநிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஆர்.கே.சுரேஷ் `தான் விசாரணைக்கு ஆஜராக வந்திருப்பதாக’ தெரிவித்திருக்கிறார். அதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விடுவித்தனர். அதையடுத்து, நேற்று காலை சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆர்.கே.சுரேஷ் `மொட்டை அடித்த கெட்டப்பில்’ விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி.வேல்முருகன் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார். அவரிடம் சுமார் 150-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஆர்.கே.சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, `ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் தயாரிப்பளர் ரூசோவிடம் ரூ.15 கோடி பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, `வைட் ரோஸ்'(White Rose) என்ற திரைப்படம் எடுப்பதற்காக, தயாரிப்பாளர் ரூசோவிடமிருந்து வங்கி கணக்கு மூலமாகவும், பணமாகவும் ரூ.15 கோடி வரை பணம் பெற்றதாகவும், அந்தப் பணத்தை திரைப்பட செலவுக்கு மட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த செலவுக்கும் பயன்படுத்தியதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதையடுத்து, `வைட் ரோஸ்’ சினிமா பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க பொருளாதார குற்றப்பிரிவு அறிவுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 13) மீண்டும் ஆர்.கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை தொடர்பான அறிக்கையை வரும் டிசம்பர் 18-ம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். அதைத்தொடர்ந்து நீதிமன்ற அனுமதியோடு ஆர்.கே. சுரேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை வட்டாரம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.