இந்த இரண்டு வீரர்களின் என்ட்ரி… வெற்றி பார்முலாவை கண்டுபிடிக்குமா இந்திய அணி?

India National Cricket Team: இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் (IND vs SA) மேற்கொண்டு வருகிறது. மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி விளையாட உள்ளது. இதில், தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய பின்னர், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவிலும் அதே ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அடுத்தாண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு (ICC T20 World Cup 2024) முன்னர், இந்திய அணி (Team India) விளையாடும் பெரிய டி20 தொடர் இதுதான். அடுத்து வரும் ஜனவரியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகளை இந்தியா விளையாட உள்ளது. எனவே, அடுத்து ஐபிஎல் தொடர் மட்டும் இருப்பதால் இந்திய அணியின் ஸ்குவாடை அமைப்பதில் இந்த தொடர் முக்கிய பங்காற்றும் எனலாம். 

அந்த வகையில், முதல் டி20 போட்டி மழையால் முழுமையாக ரத்தானதை தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங்கில் ஒரளவு பலம் வாய்ந்த அணியாக காணப்பட்டாலும் பந்துவீச்சில் இந்திய அணி பலவீனமாகவே காணப்படுகிறது. அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிராஜ் என பலமான வீரர்களாக இருந்தாலும், தீபக் சஹார் (Deepak Chahar) இல்லாதது பவர் பிளே ஓவர்களில் பெரும் பிரச்னையாக இருந்தது.

மேலும், உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். டி20 தரவரிசையில் நம்பர் 1 வீரரான பிஷ்னோய் அமரவைக்கப்பட்டார். எனவே, இந்த முறை பீஷ்னோய் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் ஜடேஜா இருப்பதால் மற்றொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர் குல்தீபிற்கு வாய்ப்பளிப்பதும் சரியாக இருக்காது. 

பேட்டிங்கிலும் சிறு சிறு பிரச்சனைகள் உள்ளது. ருதுராஜ், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கான இடம் தற்போது சற்று பின்தங்கி உள்ளது. யஷஸ்வி – ருதுராஜ் (Ruturaj Gaikwad) ஓப்பனிங்கில் இறங்கியபோது, பலம்வாய்ந்த ஜோடியாக இருந்தது. கில் அதனை பூர்த்தி செய்வாரா அல்லது நம்பர் 3 இடத்திற்கு தள்ளப்படுவாரா அல்லது பெஞ்சுக்கு திரும்புவாரா என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. 

மேலும், திலக் வர்மாவின் இடமும் சற்று சந்தேகத்துடன் காணப்படுகிறது. எனவே, சூர்யகுமார் இன்றைய போட்டியில் ருதுராஜ் மற்றும் ரவி பீஷ்னோய் (Ravi Bisnoi) ஆகியோருக்கு வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெற்றி பெற்றால் தொடரை இந்தியா சமன் செய்யலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.