வயநாடு:கேரள மாநிலம் வயநாட்டில், விவசாயி ஒருவரைக் கொன்ற புலியை பிடிக்கும் முயற்சியில், 80 பேர் அடங்கிய வனத்துறை குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டின் மூடக்கொள்ளி பகுதியில், சமீபத்தில் ஒரு விவசாயியை புலி அடித்துக் கொன்றது. அவருடைய உடலின் ஒரு பகுதியையும் அது சாப்பிட்டுள்ளது.
இதையடுத்து, அந்தப் புலியைப் பிடிக்க கேரள வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக வனப்பகுதியில் கூண்டுகள் மற்றும் கேமிராக்கள் வைக்கப்பட்டு, புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
ஆனால், நான்கு நாட்களுக்கு மேலாகியும், அந்தப் புலி சிக்கவில்லை. இதையடுத்து, 80 பேர் உள்ள குழுவை, கேரள வனத்துறை அமைத்துள்ளது. இந்தக் குழுவினர், வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடக்கொள்ளி பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கர்நாடகாவின் பந்திபுர் புலிகள் சரணாலயத்தில், பாதி தின்ற நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் தாக்குதல் நடத்திய புலி, இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதையடுத்து, இரு மாநில வனத்துறையினரும், அந்தப் புலியை பிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement