சர்வதேச திரைப்பட விழாவில் சூரி படம்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'கொட்டுக்காளி'. 'கூழாங்கல்' புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி உள்ளார். சூரி மலையாள நடிகை அன்னா பென் கதை நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு வெளிவருகிறது.
அதற்கு முன்னதாக வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு இப்படம் தேர்வாகி உள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைந்துள்ளனர். மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது.

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.