பாலக்காடு:கேரள மாநிலத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க, மோப்ப நாய் உதவியுடன் கலால் துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
போதை பொருட்கள் கடத்துவதை தடுக்க, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் கலால் துறை பண்டிகை கால சிறப்பு சோதனை நடத்துகிறது. மாநில எல்லையில், 24 மணி நேரமும் கலால் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், போதை பொருட்கள் கடத்தலை தடுக்க, கலால் துறை நடத்தும் சிறப்பு சோதனைக்கு, போலீஸ் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற ‘பெட்டி’ என்ற மோப்ப நாய் உறுதுணையாக உள்ளது.
இதுகுறித்து கலால் துறை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் கூறியதாவது:
கஞ்சா, எம்.டி.எம்.ஏ., உட்பட்ட போதைப் பொருட்களை, அடையாளம் காணவும், கண்டுபிடிக்கவும் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய் ‘பெட்டி’, நேற்று முன்தினம் முதல் அதிகாரிகளுடன் சோதனைக்கு அழைத்து செல்லப்படுகிறது.
நேற்று, வாளையார் சுங்கச்சாவடி அருகே மோப்ப நாய் உதவியுடன், பயணியரின் வாகனங்கள், பார்சல் வாகனங்கள், பஸ்கள் என சோதனை நடந்தது.
தமிழக போலீசாரின் ஒத்துழைப்புடன் எல்லையில் இந்த சிறப்பு சோதனை நடத்துகிறோம். வனப்பகுதியில் உள்ள சோதனைக்கு வனத்துறையும் உதவுகிறது.
சிறப்பு சோதனை, ஜன., 5ம் தேதி வரை நடக்கும். கிறிஸ்துமஸ்-, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, எரிசாராயம் போன்றவை எல்லை கடந்து வர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால், வரும் நாட்களில் சோதனை தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement