India National Cricket Team: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் (IND vs SA 1st ODI) நாளை (டிச. 17) தொடங்க உள்ளது. மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி முறையே டிச. 19, டிச.21 ஆகிய தேதிகளில் போட்டி நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் போட்டி மழையால் முழுமையாக ரத்தாக, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும், மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் அடைந்தது.
வெறும் 3 வீரர்கள்தான்
இந்த நிலையில், கே.எல். ராகுல் தலைமையில் இந்திய ஒருநாள் அணி (Team India) நாளை தென்னாப்பிரிக்காவை ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள வாண்டெர்ரஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் ஆகியோரை தவிர உலகக் கோப்பையில் இடம்பெற்ற வீரர்கள் யாரும் இந்த தொடரில் விளையாடவில்லை. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடிய கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஜடேஜா, சிராஜ் ஆகியோர் இதில் இடம்பெறவே இல்லை.
ஒரு போட்டியில் மட்டும் ஷ்ரேயாஸ்
மேலும், சாய் சுதர்சன், ராஜத் பட்டீதர், ரிங்கு சிங், ஆகாஷ் தீப் ஆகியோர் ஒருநாள் தொடரில் அறிமுகமாக உள்ளனர். சஞ்சு சாம்சன் (Sanju Samson), சஹால் மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் ஒருநாள் அணிக்கு திரும்பி உள்ளனர். இப்படியிருக்க நாளை பிளேயிங் லெவனில் இடம்பெறப்போவது யார் என்ற கேள்வியும் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது, டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முன் நடைபெறும் பயிற்சி போட்டிகளில் விளையாட ஷ்ரேயாஸ் ஐயர் முதல் ஓடிஐ போட்டிக்கு பின் டெஸ்ட் அணியுடன் இணைய உள்ளார். இதனால், நாளைய போட்டியில் அவர் நிச்சயம் இடம்பெறலாம்.
சஞ்சுவுக்கு இடமில்லையா?
இந்திய அணி ஓப்பனிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் – சாய் சுதர்சன் (Sai Sudharsan) வலது, இடது பார்ட்னர்ஷிப்பில் களமிறங்கப்படலாம். மூன்றாவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். நான்காவதாக திலக் வர்மா (Tilak Varma) அல்லது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இதில், திலக் வர்மா இடதுகை வீரர் என்பதால் முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட வாய்ப்புள்ளது. சஞ்சுவுக்கு சற்று வாய்ப்பு குறைவுதான்.
சஞ்சு சாம்சன் அல்லது ராஜத் பட்டீதர் ஆகியோருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் ஷ்ரேயாஸ் இல்லாத இடத்தில் வாய்ப்பளிக்கப்படலாம். ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது இடங்களில் கேஎல் ராகுல், ரிங்கு சிங், அக்சர் படேல் என மூன்று பேர் நிரந்தரமாக விளையாட வாய்ப்புள்ளது. எனவே, பேட்டிங் 7ஆவது இடம் வரை கிடைக்கும்.
குல்தீப் யாதவ் vs யுஸ்வேந்திர சஹால்
சுழற்பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால் அல்லது குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இதில் குல்தீப் யாதவ் முதன்மையான வீரராக தெரிந்தாலும் சஹாலுக்கு (Chahal) வாய்ப்பளிப்பதே அவரின் திறனை அறிய சரியான முறையாக இருக்கும். வேகப்பந்துவீச்சில் தீபக் சஹார் இல்லாததால் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இல்லையெனில், ஆவேஷ் கானுக்கு பதில் ஆகாஷ் தீப் அறிமுகமாகவும் அதிக வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் (கணிப்பு)
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, கேஎல் ராகுல், ரிங்கு சிங், அக்சர் படேல், சஹால், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்