வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகத்தில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங் 5, அவேஷ் கான் 4 விக்கெட் கைப்பற்றினர்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இந்திய ‘லெவன்’ அணியில் தமிழகத்தின் சாய் சுதர்சன் அறிமுகமானார். தென் ஆப்ரிக்க அணியில் பவுலிங் ‘ஆல்-ரவுண்டர்’ பர்கர் அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு இந்திய ‘வேகங்கள்’ தொல்லை தந்தனர். அர்ஷ்தீப் சிங் பந்தில் ரீசா ஹென்டிரிக்ஸ் (0), வான் டெர் துசென் (0), டோனி டி ஜோர்ஜி (28), கிளாசன் (6) அவுட்டாகினர். அவேஷ் கான் ‘வேகத்தில்’ கேப்டன் மார்க்ரம் (12), டேவிட் மில்லர் (2), வியான் முல்டர் (0), கேஷவ் மஹாராஜ் (4) வெளியேறினர்.
பெலுக்வாயோ (33) ஆறுதல் தந்தார். குல்தீப் யாதவ் ‘சுழலில்’ பர்கர் (7) போல்டானார். தென் ஆப்ரிக்க அணி 27.3 ஓவரில் 116 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஷாம்சி (11) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5, அவேஷ் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.
சுதர்சன் அபாரம்

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ருதுராஜ் (5) ஏமாற்றினார். பின் இணைந்த சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர், தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது ஸ்ரேயாஸ் (52) அவுட்டானார். இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுதர்சன் (55), திலக் வர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி டிச. 19ல் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement