நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தீவிரம் வாய்ந்தது; பின்னணி பற்றி அறிவது அவசியம்: பிரதமர் மோடி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த புதன்கிழமை மதியம் 1 மணியளவில் பூஜ்ய நேரம் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்து 2 பேர் திடீரென உள்ளே குதித்தனர். அவர்கள் மஞ்சள் வண்ண புகையை வெளிப்படுத்தும் உலோக பொருளை வெடிக்க செய்தனர். அதில் ஒருவர் மேஜைகள் மீது குதித்து ஓடினார்.

சர்வாதிகாரிகளை அனுமதிக்க முடியாது என்று அந்த நபர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இதேபோன்று நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட 2 பேர் வண்ண புகையை வெளிப்படுத்தும் கேன்களை பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அவையில் இருந்த எம்.பி.க்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவை உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவான நிலையில், இந்த சம்பவம் அன்று நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 4 பேரும் அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்களில் ஒருவரிடம் இருந்த நுழைவுக்கான அனுமதி சீட்டில் சாகர் சர்மா என அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவருக்கு பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா பெயரில் அந்த அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பை உண்டு பண்ணியது.

இதில், மற்றொரு நபர் கர்நாடகாவின் மைசூரு நகரை சேர்ந்த டி. மனோரஞ்சன் என்றும் அவர் ஓர் என்ஜினீயர் என்றும் தெரிய வந்தது. நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியவர்கள் அன்மோல் மற்றும் நீலம் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மக்களவையில் புகுந்த நபரை எம்.பி.க்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை அடித்து, தாக்கவும் செய்தனர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து வைரலானது.

இந்நிலையில் சம்பவம் நடந்த பின்னர் அதுபற்றி பிரதமர் மோடி முதன்முறையாக அவையில் இன்று பேசும்போது, இது மிக தீவிரம் வாய்ந்தது. இதுபற்றி விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த விவகாரத்தில் விரிவான ஒரு புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் தீவிர தன்மையை குறைத்து மதிப்பிட்டு விட கூடாது. அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மக்களவை சபாநாயகர் எடுத்து வருகிறார். விசாரணை அமைப்புகள் இந்த விவகாரம் பற்றி விசாரித்து வருகின்றன. இதற்கு பின்னணியில் உள்ள சக்திகள் மற்றும் அவர்களின் நோக்கங்கள் என்ன என்பது பற்றி கண்டறியவது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.