கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பண்பை உடைய மேஷ ராசி அன்பர்களே… இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் அமர்ந்து எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய விடாமல் முட்டுக்கட்டைப் போட்ட சனிபகவான் இப்போது நகர்ந்து பாக்கியஸ்தானம் எனப்படும் 11 ம் வீட்டுக்குள் அடியெடுத்துவைக்கிறார். சனிபகவான் கும்ப ராசியில் 20.12.23 முதல் 6.3.26 வரை சஞ்சரிக்க உள்ளார். இந்த அமைப்பு உங்களுக்கு அபரிமிதமான பலன்களை வழங்க இருக்கிறது.
சோர்வும் சோகமும் ஓடி மறையும். சுறுசுறுப்பாவீர்கள். மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பணம் பல வகைகளிச்லும் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை இருந்ததே… அது மாறும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன் – மனைவிக்குள் இருந்த பூசல்கள் விலகும். ஒருவருவருக்கொருவர் கலந்து பேசி பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். உங்கள் மனதுக்குப் பிடித்தமான வீடு, மனை அமைய வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக்காத்திருந்த தம்பதிகளுக்கு அந்த பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். மகன் அல்லது மகளுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.
பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்க வகை பிறக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களை வளர்ச்சியைக் கண்டு பிரமிப்பார்கள். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வகையில் இருந்துவந்த சங்கடங்கள் தீரும். அவர்களின் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும். புதிய கௌரவப் பதவிகள் தேடிவரும். வழக்குகளில் இதுவரை இருந்தவந்த இழுபறி நிலை மாறி சாதகமாக தீர்ப்பு வரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.
சனியின் பார்வைப் பலன்கள்
உங்கள் ராசியை சனிபகவான் பார்ப்பதால் தேவையற்ற கோபமும் சலிப்பும் ஏற்படும். உடலில் அலர்ஜி போன்ற தொந்தரவுகள் வரக்கூடும். ஆனாலும் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். சாப்பாட்டு விஷயத்தில் கவனம் தேவை. அஜீரணம் முதலான உபாதைகள் ஏற்படலாம். நரம்பு சம்பந்தமான பிரச்னைகளிலும் கவனம் தேவை. சனிபகவான் உங்களின் ராசிக்கு 5 -ம் வீடான சிம்மத்தைப் பார்ப்பதால் குழந்தைகளின் நலனில் அக்கறை தேவை. அவர்களின் படிப்பில் உரிய கவனம் செலுத்துங்கள். சனிபகவான் உங்களின் 8 – ம் வீடான விருச்சிகத்தைப் பார்ப்பதால் தூர தேசப் பயணம் அமையும். இந்தக் காலகட்டத்தில் பயணத்தின் போது கவனம் வைக்க வேண்டியது அவசியம்.
வியாபாரம்: தொழில் சூடுபிடிக்கும். இதுவரை விற்காமல் தேங்கியிருந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்கள் கூடுமானவரை ஒத்துழைப்பு தருவார்கள். லாபம் அதிகரிக்கும். கடை அல்லது அலுவலகத்தை வசதியான புதிய இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்கள் உங்களுக்குப் பக்கபலமாய் இருப்பார்கள்.
உத்தியோகம்: நிர்வாகத் திறமைக் கூடும். இதுவரை தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார். உங்கள் ஆலோசனை பாராட்டப்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரியும் நபர்களுக்குப் புதிய வேலையும் வேலைபார்க்கும் இடத்தில் நல்ல சம்பளமும் சலுகைகளும் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித்திணறி தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திருப்பத்தைத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாய நாதர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.