ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் செய்த 3 முக்கிய தவறுகள்… யானைக்கும் அடி சறுக்கும்!

IPL Auction 2024: ஐபிஎல் தொடர் என்றாலே அதன் ஏலம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். 2008ஆம் ஆண்டில் இருந்து, 2023ஆண் ஆண்டு வரை பல மினி ஏலங்களும், மெகா ஏலங்களும் நடைபெற்றுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரண்தான் 18.50 கோடி ரூபாயில் அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்ட வீரராக உள்ளார். இப்படி ஏலம் என்றாலே தனி பரபரப்பு சூழந்துகொண்டுவிடும். 

அந்த வகையில் துபாயில் நாளை நடைபெற உள்ள மினி ஏலமும் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. ஏலத்திற்கு முன்னரே, ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது எனலாம். டிரேடிங், திடீர் கேப்டன்ஸி மாற்றம், அணிக்கு உள்ளேயான முணுமுணுப்பு என மும்பை இந்தியன்ஸ் தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. 

குஜராத் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் (Hardik Pandya Trade) செய்தது மட்டுமின்றி ரோஹித் சர்மா (Rohit Sharma Captaincy) உடனே கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி அதை ஹர்திக்கிற்கு கொடுத்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ரசிகர்கள் தரப்பில் கண்டனம் எழுந்தது. சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் மறைமுகமான சமூக வலைதள பதிவுகளையும் பதிவிட்டிருந்தனர். 

யானைக்கும் அடி சறுக்கும்…

ஐபிஎல் தொடரில் ஏலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதில் வீரர்களை தேவைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துவிட்டால் உங்களின் பாதி வெற்றி உறுதியாகிவிடும் என்பது வல்லுநர்களின் கருத்து. இதனை வெற்றிகரமான அணிகளாக உள்ள அதாவது தலா 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மேற்கொள்ளும். குறிப்பாக மும்பை அணி ஏலத்தில் சிறப்பாக  செயல்படும். மும்பை அணி ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எடுத்த வீரர் என்றால் அது கேம்ரூன் கிரீன் தான். கேம்ரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை எடுத்தது. 

ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐபிஎல் ஏல வரலாற்றில் எடுத்த தவறான முடிவில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார் என்பதை இதில் காண வேண்டும். 

ரிக்கி பாண்டிங்

2013ஆம் ஆண்டில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி முதன்முதலில் கோப்பை வென்றது. ஆனால், அந்த சீசனில் முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்டது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) ஆவார். அவரை 2013 ஏலத்தில் 2.2 கோடி ரூபாய்க்கு மும்பை அணி எடுத்தது. அந்த காலகட்டம் அவர் ஓய்வை நோக்கிய காலகட்டமாகும். சச்சின் ஓய்வு பெற்று, 2012 ஹர்பஜன் கேப்டன் பொறுப்பேற்ற பின்னரும் தங்களுக்கு வலிமையான கேப்டன் வேண்டும் என்ற எண்ணத்துடன் மும்பை இந்தியன்ஸ் ரிக்கி பாண்டிங்கை எடுத்தது. ஆனால், அது சரிப்பட்டு வரவில்லை. அவர் 5 போட்டிகளில் 52 ரன்களையே அடித்தார். பாதியில் தனது கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் அளிக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டு பிளேயிங் லெவனில் இருந்தும் ஒதுங்கிகொண்டார். அதன்பின், 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரானார். 

ஆர்ச்சர் 

காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து வேகப்புயல் ஜோப்ரா ஆர்ச்சரை (Jofra Archer) மும்பை இந்தியன்ஸ் அணி 2022ஆம் ஆண்டு ஏலத்தில் 8 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. 2022ஆம் ஆண்டு சீசன் முழுவதும் அவர் விளையாடவில்லை. 2023ஆம் ஆண்டு பும்ரா இல்லாத நிலையில், ஆர்ச்சர் சில போட்டிகளில் விளையாடினார். ஆனால் அவரை ரூ.8 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது உபயோகம் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி அவரை இந்த வருடம் விடுவித்து தனது பர்ஸை அதிகப்படுத்தியது. மும்பையின் திட்டம் நிறைவேறாமல் போனதால் கடந்த மூன்று வருடங்களாக அவர்களால் கோப்பையை வெல்ல இயலவில்லை எனலாம். 

பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர நாயகன் பொல்லார்ட்தான் (Pollard) என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. அவர் ஓய்வுபெற்ற பிறகு அந்த இடத்தை நிரப்ப முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தவித்து வருகிறது. ஒரு துடிப்பான வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் வேண்டும் என்பது அந்த அணியின் அவா. அதனால்தான் கேம்ரூன் கிரீனுக்கு சென்றது. ஆனால், அவரையும் இம்முறை விடுவித்து இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை எடுத்துள்ளது. இருப்பினும், 2022ஆம் ஆண்டில் பொல்லார்ட்டை பேக் செய்து ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது அவர்களுக்கு உபயோகப்படவே இல்லை. அடுத்த சீசனில் அவர் ஓய்வு பெற்றார். 

இவர்கள் மட்டுமின்றி 2022ஆம் ஆண்டில் இஷான் கிஷனுக்கு ரூ.15 கோடி, 2011இல் ஆண்ட்ரூ சைமண்ட்சிற்கு ரூ.3.9 கோடி போன்ற பல்வேறு தவறுகளையும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் செய்துள்ளது. அந்த வகையில் நாளை நடைபெறும் ஏலத்தில் அந்த அணி தவறு செய்யுமா அல்லது தவறில் இருந்து கற்ற பாடத்தை செயல்படுத்துமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.