11 பெண்களுக்கு வெள்ளாடுகள்; மொய்விருந்து நடத்தி உதவிய டீக்கடைகாரர்… பாராட்டுக்குரிய முயற்சி!

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை அருகே உள்ள மாங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். சொந்தமாக டீக்கடை ஒன்றை நடத்தி வரும் இவர், அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியில் பல நல்ல விசயங்களை செய்துவருகிறார். அந்த வகையில், தனது டீக்கடையில் மொய் விருந்து நடத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து 11 பெண்களுக்கு வெள்ளாடுகளை வாங்கி வழங்கி, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார். இதுபற்றி, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

பெண்களுக்கு வெள்ளாடு

“சிவக்குமார் கடந்த 2012-ம் வருடம் முதல் சொந்தமாக ‘ஸ்ரீ பகவான் டீ ஸ்டால்’ நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் புதுக்கோட்டை டு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வம்பன் நான்கு ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த ஒன்றரை வருடமாக கேப்பறை பகுதியில் நடத்தி வருகிறார்.

தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை சமூக விசயங்களுக்காக செலவு செய்து வருகிறார் சிவக்குமார். கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலால் இந்தப் பகுதி பாதிக்கப்பட்டபோது, அவரது கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த ரூ. 28,000 கடனை தள்ளுபடி செய்தார். அதேபோல், வருடத்துக்கு 1,000 மரக்கன்றுகள் என்று மழைக்காலங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கி வந்தார்.

அப்படி, அவர் கொடுக்கும் மரக்கன்றுகளை ஒரு வருடத்தில் யார் சிறப்பாக வளர்க்கிறார்களோ அவர்களுக்கு பரிசு என்றும் அறிவித்தார். அதன்படி, சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்தெடுத்த 10 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா ஒரு சில்வர் குடமும், ஹாட் பாக்ஸூம் வழங்கினார். அதேபோல், அவரது கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் பால் இலவசம் என்று அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில், இலங்கையில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டபோது, கடந்த ஆண்டு அவரது கடையில் மொய் விருந்து நடத்தி, அதில் வசூலான ரூ. 16,000 தொகையை தமிழக அரசிடம் வழங்கினார். அதேபோல், கொரோனா காலகட்டத்தில் டீக்கடையில் மொய் விருந்து நடத்தி அதில் வசூலான ரூ. 20,000 நிதியை அரசிடம் ஒப்படைத்தார். தவிர, தன் நண்பர்கள் பங்களிப்போடு கொரோனா ஊரடங்கின்போது அருகில் உள்ள மக்களுக்கு மளிகை சாமான்களை வழங்கினார்.

டீக்கடையில் மொய் விருந்து

இவர் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்துவதால், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இவருக்கு ‘பசுமை சாம்பியன்’ என்ற விருதையும், ரூ. 1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார். அதேபோல், இவருக்கு விகடன் ’டாப் 10 மனிதர்கள்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், தனது கடையில் மொய் விருந்து நடத்தி, அதில் வசூலான பணத்தில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த, கணவரால் கைவிடப்பட்ட, மற்றும் கணவரை இழந்த ஏழ்மை நிலைமையில் உள்ள 11 பெண்களுக்கு வெள்ளாடுகள் வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்” என்றார்கள்.

சிவக்குமாரிடம் பேசினோம். “மொய் விருந்து செய்ய இருப்பதைப் பற்றி சமூகவலைதளங்களில் பதிவு செய்தேன். கடந்த மாதம் 5-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொய் விருந்து நடக்கும் என்றும், மொய் விருந்து செய்பவர்களுக்கு டீயும், வடையும் கொடுத்து உபசரிக்கப்படும் என்றும் அறிவித்தேன். பலரும் ஆர்வமாக வந்து கலந்துகொண்டு, மொய் செய்தார்கள். கடைக்கு முன்பு ஓர் உண்டியல் வைத்து அதன் மூலமும், ஜிபே மூலமும் மொய் வசூல் செய்தோம். அன்று மட்டும் ஆன்லைன் மூலம் ரூ. 5,109, நேரடியாக ரூ. 36,638 என்று மொத்தமாக ரூ. 41,747 வரை வசூலானது. இந்நிலையில், தொடர்ந்து சமூகவலைதளங்களைப் பார்த்து, ஜி.பே மூலம் பலரும் தொடர்ந்து பணம் அனுப்பினார்கள்.

சிவக்குமார்

அதன்படி, மொத்தமாக ரூ. 63,000 வரை வசூலானது. முதலில் கறவை மாடுகள் வாங்கி இயலாதவர்களுக்கு உதவலாம் என்று நினைத்தேன். அதற்காக ஏற்கெனவே, இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த வறுமை நிலைமையில் உள்ள 50 பேரை தேர்வு செய்து, அவர்களில் 15 பேரை தேர்வு செய்து, கடைசியாக அவர்களில் இருந்து தகுதியுள்ள 8 பயனாளிகளை தேர்வு செய்தோம். ஆனால், அப்படி கறவை மாடுகள் வாங்கி கொடுப்பதானால், வசூலான தொகையில் ஒருவர் அல்லது இரண்டு பேருக்குதான் உதவ முடியும் என்பதால், கன்றுக்குட்டிகளாக வாங்க முடிவு செய்தோம். கன்றுக்குட்டிகளாக வாங்கினாலும் நான்கு பேருக்குத்தான் வாங்க முடியும். அதனால், வெள்ளாடுகள் வாங்கிக் கொடுப்பது என்று முடிவெடுத்தோம். இதன் மூலம், 11 பெண்களுக்கு உதவ நினைத்தோம்.

அருகில் உள்ள மாஞ்சான் விடுதி, மழவராயன்பட்டி, கல்லுப்பள்ளம், மேட்டுப்பட்டி, கொத்தக்கோட்டை, குப்பைக்குடி தோப்புக்கொல்லை, கல்யாணபுரம், சின்னக்கணக்கன்பட்டி, தெற்குத்தோப்பு, மேலக்கொல்லை திருக்கட்டளை எனப் பல ஊர்களுக்குப் போய் வெள்ளாடுகளை வாங்கினோம். எல்லாமே பெண் ஆடுகள். ரூ. 5000 தொடங்கி ரூ. 7000 மதிப்பில் வாங்கினோம். அவற்றை டாடா ஏஸ் வாகனத்தில் கொண்டு வந்து கடையில் கட்டினோம்.

டீக்கடையில் மொய் விருந்து

நண்பர்கள் மூலம் சுத்துப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த செல்லம்மாள், வெள்ளையம்மாள், தமிழ்செல்வி, சுகன்யா, பிரகதம்பாள், வீரம்மாள், செல்லம்மாள், ராணி, லட்சுமி, ராமு, ராணி ஆகிய 11 பெண்களுக்கு ஆடுகளை வழங்கினோம். அனைவரும் 40 வயது தொடங்கி 70 வயது வரையுள்ள பெண்கள். அவர்களுக்கு என் கடையில் டீ, பலகாரம், காலை டிஃபன் கொடுத்து உபசரித்தோம். தொடர்ந்து, என் கடைக்கு டீ குடிக்க வந்த கஸ்டமர்களை வைத்தே, அவர்களுக்கு ஆடுகளை வழங்க வைத்தோம். பிறகு, அந்தப் பெண்களையும், அவர்களுக்கான ஆடுகளையும் டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, அவர்களது ஊர்களில் இறக்கிவிட ஏற்பாடு செய்தோம்.

ஆடுகளை, ஒருவேளை ஏதேனும் கஷ்டமான சூழ்நிலையில் அவர்கள் விற்றுவிடலாம் என்பதால், பயனாளிகளை தேர்வு செய்தபோதே, இரண்டு பேர் மூலம் அவர்களிடம் போனில் அடிக்கடி, ‘ஆட்டை விற்றுவிடாமல் தொடர்ந்து வளர்ப்பீர்களா?’ என்றெல்லாம் கேட்க வைத்து, ‘ஆடுகளை வளர்ப்போம், விற்கமாட்டோம்’ என்று சொன்ன பெண்களைத்தான் பயனாளிகளாகத் தேர்வு செய்தோம். மேலும், ஆடுகளை அவர்களிடம் வழங்கியபோதும், அவர்கள் ஆட்டை விற்றுவிடக் கூடாது என்பதால், ’நீங்கள் 11 பேரும், உங்கள் ஆடு குட்டிபோட்டவுடன் தலா ஒரு பெண் குட்டியை எனக்கு வழங்க வேண்டும்’ என்றும் சொல்லியுள்ளேன்.

பெண்களுக்கு வெள்ளாடு

அதோடு அவர்கள் கொடுக்கும் ஆட்டுக்குட்டிகளை இன்னும் 11 புதிய பெண்களுக்கு வழங்க முடியும். தொடர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் பல பெண்களுக்கு இந்த முறையில் கால்நடைகளை வழங்கும் எண்ணத்தில் இருக்கிறேன். பொருளாதாரத்தில் சிரமப்படும் பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகள் கொடுத்ததும், அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் எனக்கு பெரிய மனதிருப்தியைக் கொடுத்திருக்கு” என்றார் நிறைவுடன்.

நல்ல எண்ணங்கள் நிறைவேறட்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.