டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, உள்ளே குதித்த இரண்டு இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையில், கைதுசெய்யப்பட்டவர்கள், “வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, மணிப்பூர் கலவரம் குறித்து அரசு விவாதிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட போராட்டம்தான் இது…” என விளக்கமளித்தனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது.

அப்போது பேசிய வயநாடு எம்.பி ராகுல் காந்தி, “அந்த இளைஞர்கள், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை அடையாளப்படுத்தவே இப்படிச் செய்திருக்கிறார்கள். இதுதான் தற்போதைய இந்தியாவின் முக்கியப் பிரச்னை” என்றார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க அரசை நோக்கி கேள்வி எழுப்பிய 78 எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இன்றும் அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களின் செயலை ஆதரிக்கும் விதத்தில் பேசுவது, நாடாளுமன்றத்தின் விதிமீறலைப்போலவே ஆபத்தானது. ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கைகொண்ட அனைவரும் கூட்டாக இந்த நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள், விரக்தியில் நாடாளுமன்றத்தைச் சீர்குலைக்கின்றன. பா.ஜ.க உறுப்பினர்கள் நிதானத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நமது அரசின் இலக்கை இல்லாமலாக்குவதற்கே இந்தியா கூட்டணி செயல்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.