‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களில் தன் நடிப்பிற்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதிலும் ‘மார்க் ஆண்டனி’யில் அவரது நடிப்பை ‘நடிப்பு அசுரன்’ என்று அவரின் ரசிகர்கள் பாராட்டியதில் டோலிவுட் வரை சென்றுவிட்டார். ஷங்கர் – ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’, நானி நடித்துவரும் ‘சரிப்போதா சனிவாரம்’ படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். தமிழில் பிரமிக்க வைக்கும் அவரது லைன் அப்கள் இங்கே ஒரு பார்வை…

எஸ்.ஜே.சூர்யாவின் கரியரை ‘மாநாடு’க்கு முன் ‘மாநாடு’க்குப் பின் எனப் பிரிக்கலாம். ‘வந்தான்… சுட்டான்… செத்தான்’ என்ற சிம்பிள் டயலாக் அவரைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்துவிட, அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் உயரத்தொடங்கினார். சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘டான்’, ஹீரோவாக ‘பொம்மை’, ‘கடமையைச் செய்’ எனப் படங்கள் நடித்துக்கொண்டிருக்கும்போது, தன் நடிப்புத் திறமையை நிரூபிக்க ‘கில்லர்’ என்ற கதையை ரெடி செய்து வைத்திருந்தார். அதற்கு பக்காவாக ஸ்கிரிப்ட்டும் தயார் செய்து இயக்கவும் ரெடியானார்.

அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்று வருகிறது. இதனால் ரெட் கலரில் சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். கார் வந்த ராசியோ என்னவோ, ‘மார்க் ஆண்டனி’ அவரை டாப் கியரில் கொண்டு சேர்த்தது. அதன்பின், மளமளவென படங்கள் கமிட் ஆனார். ‘ஜிகர்தண்டா 2’ஐப் பார்த்து ரசித்த ரஜினி, “எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள்! நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்” எனப் பாராட்டுகளையும் அள்ளி வீசினார்.
கதாபாத்திரங்களைக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா இப்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, மற்றும் தெலுங்கில் ராம் சரணுடன் ‘கேம் சேஞ்சர்’ படங்களில் நடித்துவருகிறார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது.
தனுஷ் இயக்கி நடிக்கும் 50-வது படத்திலும் வில்லனாக நடித்துவருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இதில் தனுஷின் அண்ணனாக நடிக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. ‘டி50’ படத்திற்கு முன்னர் தனுஷ் தேனாண்டாள் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிவந்தார். அதில் அதிதி ராவ் ஹைதரியும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துவந்தார்கள். சில சூழல்களால் மேற்கொண்டு அந்தப் படம் வளராமல் போனாலும், தனுஷின் மனதில் எஸ்.ஜே.சூர்யா ஒட்டிக்கொண்டார். இதனால், ‘டி50’-இல் அவர் முதல் சாய்ஸாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்து ‘டாடா’ கவினின் ஆறாவது படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். அதன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘கோமாளி’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIC’ படத்திலும் இணைந்திருக்கிறார். தவிர தெலுங்கில் ராம் சரண் படத்திற்கு அடுத்து நானி, பிரியங்கா மோகன் நடித்துவரும் ‘சரிப்போதா சனிவாரம்’ படத்திலும் நடித்துவருகிறார். அதன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் நடந்துவருகிறது.