விருதுநகர்: தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனின் தாயார் இன்று (டிச.22) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலரும் தமிழக வருவாய்துறை அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனின் தாயார் ஆர்.அமராவதி அம்மாள் (94) இன்று அதிகாலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக அம்மையாரின் உடல் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இல்லத்தில் இன்று வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழக சபா நாயகர் அப்பாவு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப் பாண்டியன், ரகுராமன், தளபதி உள்ளிட்டோரும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், அதிமுக பிரமுகர்கள், பஜார் வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். மறைந்த ஆர்.அமராவதி அம்மாளின் இறுதிச் சடங்கு இன்று மாலை விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் உள்ள மயானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.