‘கே.ஜி.எஃப்’ இரண்டு பாகங்களின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள திரைப்படம் ‘சலார்’.
பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கே.ஜி.எஃப் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தத் திரைப்படம் நேற்று (டிசம்பர் 22) திரையரங்குகளில் வெளியானது. மக்களிடையே கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.

இந்நிலையில் சலார் படப்பிடிப்பு குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் பிரசாந்த் நீல். “ உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில அழுத்தங்கள் இருந்தன. படப்பிடிப்பால் என்னுடைய குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் போதிய நேரத்தை செலவிட முடியவில்லை.
குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவர்களைச் சந்திக்க வீட்டிற்குச் செல்வேன். நான் சரியான தந்தையாக, கணவனாக, நண்பனாக இல்லை.

சினிமாவிற்காகத்தான் எல்லாத்தையும் தியாகம் செய்கிறேன். மக்களுக்கு பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். எல்லா இயக்குநர்களும் இதுபோன்றவற்றைக் கடந்துதான் செல்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.