பிரான்ஸில் இருக்கும் ஈபிள் டவர் உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஈபிள் டவர் கட்டப்பட்டு 134 ஆண்டுகள் ஆகின்றன. ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த ஈபிள் டவர், உலகின் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த ஈபிள் டவரைக் காண, ஒவ்வொரு நாளும் சுமார் 20,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர்.

ஈபிள் கோபுரம் பொதுவாக ஆண்டுக்கு 365 நாள்களும் திறந்திருக்கும். டிசம்பர் 27, 1923 அன்று தனது 91 வயதில் இறந்த இந்த டவரைக் கட்டியெழுப்பிய குஸ்டாவ் ஈபிளின் 100-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஈபிள் டவரில் வேலை செய்யும் பணியாளர்கள் தற்போது இருக்கும் நிர்வாகத்தை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், ஈபிள் டவர் மூடப்பட்டது.
இது குறித்து ஈபிஸ் டவர் நினைவுச்சின்ன செய்தித் தொடர்பாளர், “தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த வேலை நிறுத்தம் தொடர்பான எந்தக் கேள்விக்கும் உடனடியாக பதிலளிக்கவில்லை. மேலும், இந்த வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உலகின் அதிகம் பார்வையிடப்பட்ட தளங்களில் ஒன்றான ஈபிள் டவர், பொதுவாக ஆண்டுக்கு 365 நாள்களும் திறந்திருக்கும்.

ஆனால், சமீபகாலமாக அவ்வப்போது வேலைநிறுத்தங்களைக் காண்கிறது வருத்தமளிக்கிறது. எனவே, இன்று ஈபிள் டவரைப் பார்க்க ஆன்லைனில் டிக்கெட் புக் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு, பிரச்னை சீரானதும் மின்னஞ்சல் அனுப்பப்படும். அப்போது மீண்டும் ஈபிள் டவரைக் காண வருகை தரும்படி கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.