ஹாவேரி, நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மகன்கள், மீண்டும் உயிர் பெறுவர் என்ற நம்பிக்கையில், அவர்களது சடலங்களை பெற்றோர் உப்பில் மூடி வைத்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், ஹாவேரி, பேடகியின், காலபொஜே கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நாகராஜ் லங்கேரா, 11; ஹேமந்த் ஹரிஜனா, 12. இவர்கள் கடந்த 24ம் தேதி, கிராமத்தில் உள்ள ஏரியில் நீச்சலடித்து விளையாடச் சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஏரிக்கரையில் சிறுவர்களின் உடைகளை கவனித்த சிலர், கிராமத்தினரிடம் கூறினர். பீதியடைந்த சிறுவர்களின் பெற்றோர், கிராமத்தினர் உதவியுடன் தேடிய போது, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது. சடலங்களை மீட்டு, வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, உப்பு குவியலில், சடலத்தை மூடி வைத்தால் மீண்டும் உயிர் வரும் என்று வீடியோவில் பார்த்ததாகவும், அதுபோன்று சிறுவர்களின் சடலங்களை உப்பு குவியலில் வைக்கும்படியும் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.
இதன்படி பெற்றோரும், தங்களின் மகன்களுக்கு உயிர் வரும் என நம்பி, சிறுவர்களின் சடலங்களை, உப்பில் மூடி வைத்து உயிர் பெறுவதற்காக காத்திருந்தனர்.
தொடர்ந்து, இரண்டு நாட்களாக இதுபோன்று வைத்திருந்தனர். இது குறித்து சிலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் கிராமத்துக்கு சென்ற போலீசார், பெற்றோருக்கு அறிவுரை கூறி, சடலங்களை மீட்டு, அடக்கம் செய்ய வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement