தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: செஞ்சூரியன் மைதானத்தில் 2-வது முறையாக சதம் அடித்து ராகுல் சாதனை..!

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. இந்தியா தரப்பில் கே.எல்.ராகுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த ராகுல் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் ராகுல் 101 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்காவில் உள்ள அதிவேக மைதானங்களில் ஒன்றான செஞ்சூரியனில் அவர் சதம் அடிப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2021-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இதே மைதானத்தில் 123 ரன்கள் குவித்து இருந்தார். இதன் மூலம் செஞ்சூரியனில் ஒன்றுக்கு மேல் சதம் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனையை படைத்தார்.

மேலும் ராகுல் தென்ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டில் கேப்டவுனில் நடந்த டெஸ்டில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதம் (100 ரன்) அடித்திருந்தார்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டீன் எல்கர் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அந்த அணியில் எய்டன் மார்க்ரம் 5 ரன், டோனி டி ஜோர்ஜி 28 ரன், கீகன் பீட்டர்சன் 2 ரன், டேவிட் பெடிங்காம் 56 ரன், கைல் வெர்ரையன் 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டீன் எல்கர் சதம் அடித்து அசத்தினார். தென் ஆப்பிரிக்க அணி 66 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-ம் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து 11 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.