Vijayakanth: `பென்னாகரத்தில் தோற்றீர்களே..!' – சட்டமன்றத்தை அதிர வைத்த விஜயகாந்த்தின் இடிமுழக்கம்!

சினிமா நாயகன், அரசியல்வாதி என்பதையெல்லாம் தாண்டி மனிதநேய வாதியாகக் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். தமிழ்நாட்டு மக்களால் `கேப்டன்’ என அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த், இன்று தனது 71-வது வயதில் காலமாகியிருக்கிறார். அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்திவரும் இவ்வேளையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் முழங்கிய உரை இன்றளவும் பலராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2012-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

வெற்றிடம் இல்லாத போதே வென்று காட்டியவர்!

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பேச்சுகள் எழ, இங்குள்ள பலருக்கும் அரசியல் ஆசை எட்டிப் பார்த்தது. ஆனால், இரண்டு முன்னாள் முதல்வர்களும் முழு வீச்சில் அரசியல் செய்து கொண்டிருந்தபோது துணிச்சலுடன் களத்தில் குதித்தவர் விஜயகாந்த். 2005-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைத் தொடங்கியவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார். முதல் தேர்தலிலேயே எவரும் எதிர்பாராத வகையில் விஜயகாந்த்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டவர்களில், விருத்தாசலத்தில் விஜயகாந்த் மட்டுமே வென்றிருந்தாலும், 8.38% வாக்குகளைப் பெற்று அரசியல் களத்தை ஆச்சர்யப்பட வைத்தது விஜயகாந்த்தின் கட்சி.

சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்…

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 10 சதவிகித வாக்குகளை அள்ளிய தே.மு.தி.க, 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தது. ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில், 29 தொகுதிகளைக் கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு 23 இடங்கள் மட்டுமே கிடைக்க, எதிர்க்கட்சித் தலைவர் பதவி விஜயகாந்த் வசமானது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து வென்றிருந்தாலும், எதிர்க்கட்சியாக மக்கள் பிரச்னைகளுக்கு ஜெயலலிதா அரசை எதிர்த்துப் பல கேள்விகளை எழுப்பினார் விஜயகாந்த்.

பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் அரசுக்கு எதிராக தே.மு.தி.க-வினர் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க, இரு தரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், தனது நாக்கை துருத்தி `ஏய்’ என ஜெயலலிதா முன்னிலையில் எகிறினார் விஜயகாந்த். தொடர்ந்து, சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வுக்கும், தே.மு.தி.க-வுக்கும் நடந்த மோதல்களை தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க கைகட்டி வேடிக்கை பார்த்த சம்பவங்களும் அரங்கேறின.

`கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில்..!’

2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரில், “உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு பல விதங்களில் விலைவாசியை உயர்த்தியிருக்கிறது அரசு. தைரியம் இருந்திருந்தால், தேர்தலுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்” என்றார் தே.மு.தி.க எம்.எல்.ஏ சந்திரகுமார்.

Vijayakanth | விஜயகாந்த்

இதற்குப் பதிலளித்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, “இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. தைரியமிருந்தால், நீங்கள் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள்… யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்றார். இதற்கு விஜயகாந்த், “இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும். இது இயல்புதானே” என்றார். “இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியை ஒப்புக்கொண்டார்” என ஜெயலலிதா பதிலடி கொடுக்க, உடனடியாக எழுந்து பதில் கொடுத்தார் விஜயகாந்த்…

2010-ம் ஆண்டு நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான தி.மு.க அமோக வெற்றிபெற்றது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க டெபாசிட் இழந்தது. இதைச் சுட்டிக்காட்டி விஜயகாந்த் சட்டமன்றத்தில் பேசியது அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் குரலை உயர்த்தி துணிச்சலுடன் விஜயகாந்த் பதிலளித்த விதம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

விஜயகாந்த்

விஜயகாந்த் இன்று இந்த மண்ணைவிட்டு மறைந்திருந்தாலும், துணிச்சலுடன் அவர் எழுப்பிய கேள்விகளால், தமிழக, ஈழ தமிழக மக்களுக்காக நடத்திய போராட்டங்களால் எப்போதும் தமிழ்நாட்டு அரசியலின் முக்கியத் தலைவராக அவர் நினைவுகூரப்படுவார்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.